Skip to main content

கூட்டணி தொடருமா, தொடராதா? - டென்ஷனான அதிமுகவிற்கு வானதி சீனிவாசன் பதில்!

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

Will the alliance continue? Don't Continue?; Vanathi Srinivasan's answer to the tense AIADMK!

 

அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக உடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டது. அப்பொழுது இருந்தே அதிமுகவிற்கும் அண்ணாமலைக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இருப்பினும் இரு தரப்பு தலைவர்களும் கூட்டணியில்தான் உள்ளோம் எனத் தெரிவித்து வந்தனர்.

 

அதனைத் தொடர்ந்து அதிமுக ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்ற அண்ணாமலையின் கருத்து அதிமுகவிற்கு அதிர்ச்சியைக் கொடுக்க, கூட்டணி எல்லாம் மேலே உள்ள டெல்லி தலைவர்கள் எடுக்கும் முடிவு. தமிழக பாஜக தலைவர் சொல்வதெல்லாம் எடுபடாது என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்து வந்தனர்.

 

தொடர்ந்து ஓரிரு நாட்களுக்கு முன், ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், இன்று சென்னையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அண்ணாமலையைப் பார்த்து நான் கேட்கிறேன். அதிமுகவைத் தான் பிடிக்கவில்லையே. ஏன் எங்களைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருக்கிறீர்கள். போங்களேன். உங்களை யார் இங்கு இழுத்து பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள்” என கடுமையாக விமர்சித்திருந்தார்.

 

அதிமுகவினரின் கடுமையான விமர்சனத்துக்கு பாஜக தரப்பும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கூட்டணி தொடர்பான விஷயங்களில் அகில இந்திய தலைமை என்ன முடிவை எடுக்கிறதோ அதற்கு கட்டுப்பட்டுத்தான் நாங்கள் பேச வேண்டும். தமிழகத்தில் கூட்டணி தொடர்பாக அதிமுக மற்றும் மற்ற கட்சிகள் செய்யும் விமர்சனத்திற்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்பது நாட்டின் நலனுக்காக கட்டமைக்கப்பட்டது. இதைப் பற்றி பேசுவதற்கும் இது தொடர்பாக முடிவெடுப்பதற்கும் தேசிய தலைமை இருக்கிறது. அவர்களது அறிவுரைப்படி அவர்கள் சொல்வதை செய்வோம்” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்