Will the AIADMK-BJP alliance come to an agreement? A new issue has arisen today

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும், கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அனைத்திலும் தன்னையே அண்ணாமலை முன்னிறுத்திக் கொள்வதாகவும் சமீபகாலமாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம், அண்ணாமலை தலைமையிலான பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி கட்சியிலிருந்து விலகினார்.

Advertisment

இந்த நிலையில் தமிழக பாஜக ஐ.டி பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவிலிருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இவரைத் தொடர்ந்து ஐ.டி.விங் செயலாளர் திலிப் கண்ணனும், ஓ.பி.சி மாநிலச் செயலாளர் ஜோதியும் பாஜகவிலிருந்து விலகி எடப்பாடி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவடைந்த நிலையில்மூன்று முக்கியப் பொறுப்பாளர்களும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை கிளப்பியது.

Advertisment

இவ்விவகராம் குறித்து நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழ்நாட்டில் தோசை, இட்லி சுட வரவில்லை.ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர் எப்படி முடிவு எடுப்பார்களோ அதுபோல் தான் என் முடிவும் இருக்கும். நான் தலைவன். தமிழகத்தில் என்னைப் போன்று தாக்கப்பட்ட தலைவர்கள் இல்லை” எனக் கூறியிருந்தார்.

அதிமுக ஐ.டி.விங் தரப்பு, “மேலாளர் மற்றும் தலைவருக்கும் இடையேயான வேறுபாடு என்பதுமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 1.5 கோடி அதிமுக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் தான் கருணாநிதியும். ஆனால், பாஜகவின் மாநிலத்தலைவர் பொறுப்பு என்பது நாடு தழுவிய கார்ப்பரேட் நிறுவனத்தின் கிளை மேலாளர் பதவிக்கு நிகரானதே” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி, “தலைவர் என்பவர் எப்படி தேர்வு செய்யப்படுகிறார் என்பது முக்கியமல்ல; எப்படி செயல்படுகிறார் என்பதுதான் முக்கியம். நேர்மைக்குச் சொந்தக்காரராகவும்; பித்தலாட்டத்துக்கு துணை போகாதவராகவும் இருக்கும் முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு, திராவிட இயக்கத்தவர்களின் சான்றிதழ் ஒரு நாளும் தேவையில்லை!” எனக் கூறியுள்ளார்.