Advertisment

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? வாரிசா, துணிவா? - பொங்கல் ரிலீஸ் குறித்து குஷ்பு

Who will be the next superstar? varisu? thunivu? - Khushboo on Pongal release

Advertisment

கோவை வெள்ளலூரில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நடிகை மற்றும் பாஜக தேசிய செயலாளர் குஷ்புகலந்து கொண்டார். அப்பகுதி மக்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார்.

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, “பிரதமர் மோடி தமிழ் பண்பாடு, தமிழ் கலாச்சாரத்திற்காக எவ்வளவு பாடுபடுகிறார் என்று பார்க்கிறோம். ஒவ்வொரு மேடையிலும் தமிழையும் தமிழ் கலாச்சாரத்தையும் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், இவர்கள் தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் தான் பாதுகாக்கிறோம் எனச் சொல்லிக்கொண்டு பொங்கல் பண்டிகைக்கு ஆயிரம் ரூபாயும் ஒரு கரும்பு மட்டுமே கொடுக்கின்றார்கள். இதற்கு கொடுக்காமலேயே இருக்கலாம். சுயமரியாதை என்று சொல்லக்கூடிய திமுக ஆட்சியில் இருக்கும்போது சுயமரியாதையோடு வாழும் ஒவ்வொரு தமிழர்களும் இதைக் கண்டிப்பாக வேண்டாம் என்று தான் சொல்லுவார்கள்.

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒருவர் சொல்கிறார். ஆனாலும் பாஜகவில் இருந்து பெண்கள் யாரும் வெளியே போகவில்லையே. நான் பாஜகவில் தான் இருக்கிறேன். திமுக பேச்சாளர் ஒருவர் பெண்களைப் பற்றி மிக இழிவாகப் பேசும் பொழுது இதே பாஜக சார்பாக காவல் துறையில் வழக்கு கொடுத்துவிட்டு மாநிலத்தலைவர் அண்ணாமலை ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். நேற்று முன் தினம் இவ்விவகாரம் என்.சி.டபுள்யூவரை சென்று அப்பேச்சாளரை அழைத்து கையெழுத்து வாங்கி மன்னிப்புக் கடிதம் பெறப்பட்டுள்ளது. பாதுகாப்பு இல்லை என்று சிலருக்கு அவ்வாறு தோன்றினால் அனைவருக்கும் அப்படி இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

Advertisment

ராகுல் காந்தியின் நடைபயணத்திற்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுக்கிறார். அது அவரது விருப்பம். ஆதரவு கொடுக்கக் கூடாது என நாங்கள் யாரும் சொல்லவில்லை. கமல்ஹாசனுக்கு தனிப்பட்ட கட்சி உள்ளது. அதற்கு அவர் தலைவர். அவர் ஆதரவு கொடுக்கின்றார்.

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தானா எனக் கேட்கின்றனர். இது சினிமா மேடை அல்ல. அரசியலை மட்டும் பேசலாம். சினிமாவில் இருக்கும் போது சினிமாவைப் பற்றி பேசலாம். பொங்கலுக்கு வாரிசு படத்திற்கு செல்வீர்களா? துணிவு படத்திற்கு செல்வீர்களா? எனக் கேட்கின்றனர். நான் வீட்டில் இருக்க போகிறேன். முதல் நாள் முதல் காட்சிக்கு போவது பற்றி உங்களை போல் ரசிகர்கள் தான் சொல்ல வேண்டும். நான் வீட்டில் தான் இருக்கப் போகிறேன். வாரிசு படத்தில் நடித்தது பற்றி தற்போது எதையும் சொல்ல முடியாது.

மும்பையில் பிறந்து அங்கே வளர்ந்தாலும் 36 வருடங்களாக தமிழகத்தில் இருக்கிறேன். என் இரு மகள்களும் இங்குதான் பிறந்துள்ளனர். நான் தமிழச்சி தான். தமிழ்நாடு, தமிழகம் என எப்படி இருந்தாலும் அது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய அங்கம். அதை இந்தியாவில் இருந்து பிரித்து தனியாகப் பார்க்க முடியாது” எனக் கூறினார்.

Thunivu varisu kushboo
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe