Skip to main content

“சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூற ஆர்.என்.ரவி யார்?” - அன்புமணி கேள்வி

Published on 09/03/2023 | Edited on 09/03/2023

 

"Who is RN Ravi to say that the legislature has no authority?" - Anbumani question

 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது” என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

 

அதில் அவர், “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் மாநில சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுநர் கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆளுநர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது; தமிழ்நாடு சட்டப்பேரவையை சிறுமைப்படுத்தும் செயல் ஆகும்.

 

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை ஆளுநர் திருப்பி அனுப்பியது இரு காரணங்களின் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டதாகும். முதலாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று இந்திய அரசியலமைப்பின் எந்தப் பிரிவும் கூறவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், ஒதிஷா, சிக்கிம், நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ரத்து செய்து 03.08.2021-ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆன்லைன் சூதாட்டம் வாய்ப்புகளின் அடிப்படையிலான சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான தரவுகளுடன் திருத்தப்பட்ட சட்டத்தை இயற்றலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.

 

மற்றொருபுறம், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது குறித்த சர்ச்சை பற்றி நாடாளுமன்ற மக்களவையில் விளக்கம் அளித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ், “அரசியலமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநிலப் பட்டியலில் 34-ஆவதாக ‘பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாடுதல்’ என்ற பொருள் இடம் பெற்றுள்ளது. அதனால், அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை மாநில அரசுகள் இயற்றலாம். அதுமட்டுமின்றி, 162-ஆவது பிரிவின்படி ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான நிர்வாக அதிகாரமும் மாநில அரசுகளுக்கு உண்டு” என்று தெரிவித்தார். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று மத்திய அரசும் கூறுகிறது; சென்னை உயர்நீதிமன்றமும் கூறுகிறது. அவ்வாறு இருக்கும் போது அதற்கான அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று கூற ஆர்.என்.ரவி யார்? இதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாகவே ஐயுற வேண்டியுள்ளது.

 

இரண்டாவதாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ரவி உறுதியாக நம்பியிருந்தால், கடந்த அக்டோபர் மாதம் 19-ஆம் நாள் சட்டம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பிய உடனேயே திருப்பி அனுப்பியிருந்திருக்கலாம். அவ்வாறு அனுப்பியிருந்தால் உடனடியாக தமிழக அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியிருக்கும். அப்படி இரண்டாவது முறையாக சட்ட முன்வரைவை நிறைவேற்றியிருந்தால் அதற்கு ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளித்திருக்க வேண்டும். அதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருக்கும். ஆனால், அவ்வாறு செய்யாமல் 142 நாட்கள் கிடப்பில் போட்டிருந்தது ஏன்? அப்படியானால், அதன் பின்னணியில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே  தோன்றுகிறது.

 

கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு இதே ஆளுநர் தான் ஒப்புதல் அளித்தார். அப்போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா? என்று ஆளுநர் கேட்கவில்லை. இப்போது மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வினா எழுப்புவது ஏன்?

 

2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு இதுவரை 47 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்களில் 18 பேர் புதிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிறகு தற்கொலை செய்து கொண்டனர். அந்த 18 பேரின் தற்கொலைக்கும், அவர்களின் குடும்பங்கள் தெருவுக்கு வந்ததற்கும் தமிழக ஆளுநர் ரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.

 

இவை அனைத்தையும் கடந்து ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியிருப்பது ஒரு வகையில் நல்லது தான். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 200-ஆவது பிரிவின்படி, ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்டத்தை திருத்தத்துடனோ, திருத்தம் இல்லாமலோ சட்டப்பேரவை மீண்டும் இயற்றி அனுப்பும் போது அதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை ஆகும். அதன்படி, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்றினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும். அதனால் தான் இதை நல்லது என்கிறேன்.

 

எனவே, ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். வரும் 20-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், அதில் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்ட முன்வரைவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.