ADVERTISEMENT

"இதுதான் எடப்பாடியின் அடுத்த அறிவிப்பு..." - ஸ்டாலின் சொல்லும் கணக்கு!

06:24 PM Feb 06, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் இருந்து குறைகள் அடங்கிய மனுக்களை ஸ்டாலின் நேரில் வாங்கி வருகிறார். அதில் இன்று (6-ம் தேதி) நாகா்கோவில் வந்த ஸ்டாலின் ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று, "அவா்களின் அனைத்து குறைகளையும், திமுக ஆட்சி வந்த 100 நாளில் தீா்ப்பேன்' என உறுதியளித்தார்.

மேலும், பொதுமக்கள் தாங்கள் கொடுத்த மனுக்களுக்கான ரசீதை வாங்கிக்கொண்டு அதைத் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த ரசீது அவ்வளவு முக்கியமானது. காரணம், திமுக ஆட்சி வந்ததும் உங்கள் குறைகள் தீா்க்கப்படவில்லையென்றால், அந்த ரசீதுடன் தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்து அந்தத் துறை அதிகாரிகளுடன் கேள்வி கேட்கலாம்.

அது மட்டுமல்ல முதல்வா் அறைக்குள் கூட அந்த ரசீதுடன் வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்றார் ஸ்டாலின். குமரி மாவட்டம் முமுமையான கல்வியறிவு பெற்ற மாவட்டம் மட்டுமல்ல பண்பாட்டிலும் சிறந்த மாவட்டம். இங்கு படித்த இளைஞா்கள் வேலையில்லாமல் அதிகம் போ் இருக்கிறார்கள். திமுக ஆட்சி வந்ததும் இந்த மாவட்டத்தில் படித்த இளைஞா்களின் வேலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் டிஎன்பிஎஸ்சி, ஊழல் ஆணையமாக மாறிவிட்டது. இதனால் தான் படித்த தகுதியானவா்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள்.

2006-ல் திமுக ஆட்சியில் 7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே போல் வரும் திமுக ஆட்சியில், கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று ஜனவரி 13-ம் தேதி நான் அறிவித்தேன், உடனே எடப்பாடி பழனிசாமி முந்திக்கொண்டு கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துவிட்டார். இன்னும் ஒரிரு நாளில் அடுத்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறார். 5 பவுனுக்கு நகைக்கடன் வாங்கியிருந்தால் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் அறிவித்து இருக்கிறேன். எனவே இதையும் உடனே அறிவிப்பார். நாம் எதைச் சொல்லுகிறோமோ அதை எடப்பாடி செய்கிறார். யார் எதிர்க்கட்சி? யார் ஆளும் கட்சி? என்று தெரியவில்லை.

கடைசி நேரத்தில் விளக்கு பிரகாசமாக எரிந்து விட்டுத்தான் அணையும் என்பார்கள். அதே போல்தான் எடப்பாடியின் அரசு. தமிழகத்தில் நடப்பது அரை பாஜக, அரை அதிமுக ஆட்சி அதனால் தான் எல்லாமே அரை குறையாக உள்ளது. நீட் தோ்வு என்றால் ஆதரவும் கொடுப்பார்கள் எதிர்த்துத் தீா்மானமும் போடுவார்கள். 7 போ் விடுதலையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், விடுதலை ஆக விடமாட்டார்கள். இருமொழிக் கொள்கையா தீா்மானம் போடுவார்கள். ஆனால், இந்தி மொழியை ஆதரித்துத் தான் இருப்பார்கள்.

மாநில உரிமையில் தலையிடுவதை தடுப்பதாக நடிப்பார்கள். ஆனால், உரிமை கிடைக்காது. நிதி கேட்டு டெல்லிக்குச் செல்வார்கள். ஆனால், நிதி கிடைக்காமல் திரும்பி வருவார்கள். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவார்கள். ஆனால், 3 ஆண்டுகளாகப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. இப்படித் தான் அரைகுறையாக இருக்கிறது இந்த ஆட்சி" இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT