ADVERTISEMENT

தி.மு.க.வின் புதிய துணைப்பொதுச் செயலாளர் யார்? - எதிர்பார்ப்பில் உடன்பிறப்புக்கள்!

03:00 PM Oct 05, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தி.மு.க.வின் புதிய துணைப் பொதுச்செயலாளர் யார் என்ற கேள்வி, சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. கட்சியின் ஐந்து துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் அண்மையில் ராஜிநாமா செய்ததையொட்டி அவரது இடம் காலியாக இருக்கிறது. அந்தப் பதவியில் புதிதாக உட்காரப்போவது யார் என்பதுதான் இப்போது தி.மு.க. தொண்டர்களின் மத்தியில் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு.

முன்பு திமுக துணைப் பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் சற்குண பாண்டியன் இறந்த போதே, அந்தப் பொறுப்பை கனிமொழிக்கு கொடுக்கப்போவதாக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், அப்போது சுப்புலட்சுமி ஜகதீசன் அந்தப் பதவியில் அமரவைக்கப்பட்டார். இப்போது அவர் விலகியதை அடுத்து காலியான பதவி கனிமொழிக்குக் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மகளிணியினரிடமும் தி.மு.க.வினரிடமும் பலமாக இருக்கிறது. இந்தப் பதவிக்கு கனிமொழியோடு மேலும் ஒரு சிலரின் பெயர் அடிபட்டுவரும் நிலையில், பெரும்பான்மையானவர்கள் கனிமொழியே இந்தப் பதவிக்கு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவருகிறார்கள்.

இது குறித்து திமுக மகளிரணி நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது “தமிழ்நாட்டு அரசியல் சூழலில் எப்போதும் பெண்கள் தங்களுக்கான இடத்தை பிடிப்பதற்குக் கடுமையாகப் போராட வேண்டும். அதுவும் ஒரு பெண் தலைமை பொறுப்புக்கு வருவது அவ்வளவு எளிதானதல்ல. அப்படி இருக்கையில், தன்னை கடுமையான கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் மகளிரணி செயலாளர் கனிமொழிக்குத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக் கொடுத்தால், அது பொருத்தமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்” என்கிறார்.

நாம் சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரோ “தலைவர் கலைஞர் இருந்த வரை கழகத்தை அரண்போல காத்து நின்றார். அவருக்குப் பின் ஸ்டாலின் அவரைப் போலவே கட்சியைக் கட்டிக்காத்து கம்பீரமாக வழி நடத்துகிறார். அதேபோல் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழியும் ஒரு பவர்ஃபுல் பொறுப்பில் இருப்பது, கட்சிக்கும் பெருமையானது. அதனால் அவருக்கு துணைச் செயலாளர் பொறுப்பைக் கொடுக்கலாம்”என்று கூறினார்.

அதேபோல், அண்ணா அறிவாலயத்தின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “பெரியாரின் ஆற்றல்மிக்க கொள்கைகளின் மீதும், அண்ணாவின் உரிமை சார் போராட்டங்களின் மீதும், கலைஞரின் அறிவார்ந்த செயல்பாடுகள் மீதும், தளபதியின் தலைமையின் மீதும் நம்பிக்கை கொண்டு செயல்படுபவர்கள் தற்போது அதிகம் தேவைப்படுகிறார்கள். அந்த விதத்தில் இன்று கனிமொழி முக்கியமானவர். கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கழகத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். அவர் அப்பொறுப்பிற்கு வந்தால் நன்றாக இருக்கும். அதோடு அவரது செயல்திறன் தூத்துக்குடி நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களைத் தி.மு.க. கோட்டையாக்கி இருக்கிறது. அண்மையில் நெய்தல் நிகழ்ச்சியை நடத்தியும் அனைத்துத் தரப்பினரின் ஈர்ப்பையும் கட்சியின் பக்கம் திருப்பி இருக்கிறார். அதனால் கனிமொழிதான் சிறந்த சாய்ஸ்” என்கிறார்.

“பல ஆண்டுகள் கட்சியின் சாதாரணத் தொண்டரைப் போல உழைத்து, கொள்கை ரீதியாகவும் களப்பணிகள் மூலம் தன் முக்கியத்துவத்தை உறுதி செய்தவர் கனிமொழி. அவர்தான் துணைப் பொதுச் செயலாளர் பதவிக்குச் சரியான ஆளாக இருப்பார்” என்று மூத்த பெண் நிர்வாகி ஒருவர் கூறுகிறார்.

தமிழ்நாட்டு அரசியலைத் தொடருந்து கவனித்துவரும் அரசியல் விமர்சகர் ஒருவரிடம் இந்தத் துணைப் பொதுச் செயலாளர் தேர்வு குறித்து பேசுகையில், "நம் மாநிலத்தின் அரசியலில் எப்போதும் ஆண்களே ஆதிக்கம் செலுத்திவருகிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு கனிமொழியிடம் பெண் ஆளுமை இருக்கிறது. இப்போது துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், திமுகவிற்கு வலிமை சேர்க்கும் என்று தோன்றுகிறது" என்று தெரிவித்தார்.

இப்படியாகக் கட்சியினர் மற்றும் அரசியல் ஆர்வலர்களின் கருத்துகள் இருக்கிறது. இம்முறை துணைப் பொதுச்செயலாளராகக் கனிமொழி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அது திமுகவின் வளர்ச்சிக்கு மட்டுமன்றி பல வழிகளில் நன்மைத் தரக்கூடியதாக இருக்கும் என்கிறார்கள் பலரும். நவம்பர் 9-ல் கூடும் பொதுக்குழு, கனிமொழியின் வியர்வைக்கு மகுடம் சூட்டுவதாக இருக்கும் என்கிறார்கள் தி.மு.க.வில் இருக்கும் பலரும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT