Skip to main content

அதிமுக என்ன செய்ய வேண்டும் என சொல்ல சி.டி.ரவி யார்? - கொதிக்கும் அதிமுக நிர்வாகி

Published on 03/02/2023 | Edited on 03/02/2023

 

admk

 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மறுபுறம் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு தேர்தல் களத்தில் அதிமுகவை பின்னடைய செய்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.

 

இந்த நிலையில், அதிமுகவின் எடப்பாடி தரப்பு மற்றும் ஓபிஎஸ் தரப்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் சந்தித்திருந்தனர். தமிழக நலன் கருதி அதிமுக அணிகள் இணைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த சந்திப்பினை அவர்கள் நிகழ்த்தி இருந்தனர். இந்த சந்திப்புக்கு பிறகு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.டி.ரவி, ''அதிமுக 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டபோது எம்ஜிஆர் திமுகவை தீயசக்தி என்று சொன்னார். அந்த வார்த்தை தற்பொழுது வரை பொருந்துகிறது. தற்பொழுது வரை திமுக தீயசக்தியாகத்தான் இருக்கிறது. எனவே, திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால், அதிமுக அணிகள் ஒன்றிணைய வேண்டும். அதற்காகத்தான் அதிமுகவின் எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் தரப்புகளைச் சந்தித்தோம்' எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், பாஜக கருத்துக்கு அதிமுக நிர்வாகி எதிர்ப்பினை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் சிங்கை ஜீ.ராமச்சந்திரன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அதில் 'சி.டி.ரவி யார்? அதிமுக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவதற்கு. தேசியக் கட்சி என்பதாலேயே என்ன வேண்டுமானாலும் சொல்லலாமா? இங்கு சி.டி.ரவி அறிவுரை வழங்கியது போல கர்நாடக பாஜக எவ்வாறு செயல்பட வேண்டும் என்று நாங்களும் அறிவுரை வழங்கலாமா?' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம்” - ராகுல் காந்தி வேண்டுகோள்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Rahul Gandhi said that Don't insult Smriti Irani

கடந்த 2019 நாடாளுமன்றத்  தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது குடும்பத் தொகுதியான அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி தோற்கடித்தார். அதேபோன்று இந்த முறையும் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் தோற்கடிப்பேன் என்று ஸ்மிருதி இராணி சவால் விடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டியிடாமல், காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதியான ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 

அதே சமயம் அமேதியில் ஸ்மிருதி இராணியை எதிர்த்து ராகுல் காந்தி குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய நபரான கிஷோரி லால் சர்மாவைக் காங்கிரஸ் நிறுத்தியது. பின்னர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்மிருதி இராணியைத் தோற்கடித்து கிஷோரி லால் சர்மா அமோக வெற்றிபெற்றார். இதனைத் தொடர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்ட ஸ்மிருதி இராணி, தொடர்ந்து அமேதி தொகுதி மக்களுக்காக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியினர் ஸ்மிருதி இராணிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்மிருதி இராணியை இழிவுபடுத்த வேண்டாம் என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பக்கத்தில், “வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் சகஜம். அதனால் அந்த விஷயத்தில் ஸ்மிருதி இராணி அல்லது வேறு எந்தத் தலைவர்களையும், இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், கேவலமாக நடந்து கொள்வதையும் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். மக்களை அவமானப்படுத்துவதும் அவமதிப்பதும் பலவீனத்தின் அடையாளம், வலிமை அல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

காவிரி விவகாரம்; கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Edappadi Palaniswami condemns Karnataka Congress government!

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.

விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.

டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.