Skip to main content

''பூட்டை உடைத்து விட்டு உள்ளே வந்தது யார்; அவர்களின் கதி என்ன...'' - எடப்பாடி பழனிசாமி பேட்டி

Published on 20/04/2023 | Edited on 20/04/2023

 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும். தமிழகத்தில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் உள்ளது. கர்நாடகாவில் எங்கள் அடையாளத்தை காட்ட ஒரு தொகுதியில் போட்டியிடுவோம். கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என அங்குள்ள நிர்வாகிகள் கூறியதால் அங்கு போட்டியிடுகிறோம்.

 

அதிமுக தலைமைச் செயலகத்திற்கு யார் வந்தார்கள், யார் அடித்தார்கள், யார் திருடிக் கொண்டு போனார்கள் எல்லாமே உங்களுக்கு தெரியும். யார் ரவுடி கும்பலோடு வந்து தலைமை கழகத்தின் பூட்டை உடைத்து விட்டு உள்ளே வந்தது; யார் ஜெயலலிதாவின் அறையை உடைத்தது; இங்கிருக்கின்ற பொருட்களை யார் திருடிக் கொண்டு போனது, யார் யார் மேல் எல்லாம் வழக்கு இருக்கிறது; யாரிடம் அந்த பொருட்கள் எல்லாம் ஒப்படைக்கப்பட்டது என எல்லாமே உங்களுக்கு தெரியும். உண்மையை ஒருபோதும் மறைக்க முடியாது.

 

ஓபிஎஸ் சட்டமன்றத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பேசுகிறாரே தவிர உண்மை நிலையை யாரும் மறைக்க முடியாது. நீதிமன்றம் வரை சென்று தான் உத்தரவு பெற்றிருக்கிறோம். ஓபிஎஸ் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கைப்பாவையாக, பி-டீமாக செயல்பட்டு வருகிறார். அதிமுக தலைமை அலுவலகம் என்பது புனிதமான இடம். இந்த மாளிகையில் யார் தவறாக நடந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். யார் உடைத்துக் கொண்டு உள்ளே வந்தார்களோ அவர்களின் கதி என்னவென்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

 

திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுகவை வீட்டுக்கு அனுப்புவது எங்கள் லட்சியம். இந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநில மாநாடு நடத்த இருக்கிறோம். தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவில் அந்த மாநாடு இருக்கும்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்