Skip to main content

மோடி எங்கு போனாலும் திமுகவை பற்றிதான் பேச்சு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

Published on 27/08/2023 | Edited on 27/08/2023

 

Wherever Modi goes, the talk is about DMK - Chief Minister M.K.Stalin

 

நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பிறகு திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “செல்வராஜ் நான்கு முறை எம்.பி. அதேசமயம், அனைத்து தடவையும் அவர் தி.மு.க. கூட்டணியில் வெற்றிபெற்றிருக்கிறார். பெரியோரையோ, அண்ணாவையோ சந்திக்காவிட்டால் தான் ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறியிருப்பேன் என்று சொன்னவர் கலைஞர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும், திமுகவுக்கும் எப்போதும் நட்பு, அன்பு உண்டு. திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே இருப்பது கொள்கை நட்பு. வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். 

 

இன்று இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க வேண்டும் என முத்தரசன் கேட்டுக்கொண்டார். நான் எப்போதுமே திருவாரூரில் தான் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவேன். அதேபோல்தான் இந்த முறையும் இன்று இங்குத் தேர்தல் பிரச்சாரத்தை துவங்குகிறேன். 

 

தமிழ்நாட்டை காப்பாற்றிவிடோம்; வரும் தேர்தலில் இந்தியாவை காப்பாற்ற வேண்டும். இந்தியாவை காப்பாற்றவே இ.ந்.தி.யா. கூட்டணி அமைந்திருக்கிறது. மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  

 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இந்தியாவில் ஓர் நல்ல ஆட்சி அமைய மக்கள் ஒத்துழைக்க வேண்டும். பாஜக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. மதக்கலவரங்களை தூண்டி நாட்டை இரண்டாக பிரிக்கும் கொடிய ஆட்சி நடைபெறுகிறது. இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும். தேர்தலில் நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தியா கூட்டணியை அமைத்துள்ளோம். இதனை பிரதமர் மோடியால் தாங்க முடியவில்லை. 

 

அதுவும் தமிழ்நாட்டில், எப்படி கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் ஒரு கூட்டணி அமைத்து வலுவாக வழிநடத்திக்கொண்டிருக்கிறோம். அது தமிழ்நாட்டில் தொடர்ந்து வெற்றி பெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திமுக கூட்டணியும் அந்த இந்தியா கூட்டணியில் சேர்ந்திருக்கிறதே, இந்தியா கூட்டணி உருவாகுவதற்கு தமிழ்நாட்டின் இந்த கூட்டணியும் காரணமாக இருக்கிறதே எனும் ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துவிட்டது. அதனாலேயே, சுதந்திர தின கொடியேற்று நிகழ்வாக இருந்தாலும், பல மாநிலங்களில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும், வெளிநாடுகளுக்குச் சென்றாலும் நமது கூட்டணியை குறித்து கொச்சைப்படுத்தி விமர்சித்து பேசிவருகிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் நமது அணியைப்பற்றியும் அதிலும் குறிப்பாக திமுகவை பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. 

 

தமிழ்நாட்டில் ஊழல் என்று 9 வருடமாக சொல்லிக்கொண்டிருக்கிறார். அதேபோல், இந்தியாவில் உள்ள ஊழலை ஒழித்தே தீருவேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியை பார்த்து அடக்கத்துடன் கேட்க விரும்புவது, ஊழலை பற்றி பேசுவதற்கான யோகிதை பிரதமர் மோடிக்கு உண்டா?. 

 

உங்களின் வண்டவாளங்கள் எல்லாம் சி.ஏ.ஜி. அறிக்கையில் வெளியேவந்துள்ளது. ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது. அந்த சி.ஏ.ஜி. அறிக்கையில், ஒன்றியத்தில் நடைபெறும் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி, முறைகேடுகள் அதிகமுள்ள ஆட்சி, லஞ்சம் பெருத்த ஆட்சி என சொல்லியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே சொல்லிக்கொண்டுள்ளது. ஆனால், தற்போது ஒன்றிய அரசின் கீழ் இருக்கும் சி.ஏ.ஜி. சொல்கிறது. 

 

இதில், பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், எச்.ஏ.ல். விமான வடிவமைப்பு திட்டம் என ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என சொல்லியுள்ளது” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்