Advertisment

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பாமக ராமதாஸ் கேள்வி

When will the old pension scheme be implemented in Tamil Nadu?-pmk Ramadoss asked

Advertisment

பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது என பாமகநிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்துஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சண்டிகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.75 லட்சம் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ.16,746 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது; இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றிமேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும்பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Advertisment

இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இதுதான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004-ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூகப் பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்தத்தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.

இராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3-ஆம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்று என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' எனத்தெரிவித்துள்ளார்.

TNGovernment ramadas pmk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe