ADVERTISEMENT

“தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும்” முதல்வர் மு.க. ஸ்டாலின்!

08:21 PM Mar 27, 2024 | prabukumar@nak…

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் தென்காசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார், விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஆகியோரை ஆதரித்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இதுவரை 10 மக்களவைத் தொகுதிகள் தேர்தல் பரப்புரை செய்துள்ளேன். நான் போகிற இடமெல்லாம் தி.மு.க. கூட்டணிக்கு அலை அலையாக மக்கள் ஆதரவு இருக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்தால் தி.மு.க. கூட்டணிக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி உறுதியாகிவிட்டது.

ADVERTISEMENT

தாய் மற்றும் தந்தை போல் அரவணைப்போடு தமிழ்நாடு அரசு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ஒவ்வொரு குடும்பமும் பயன் பெறுகின்றனர். மாநிலம் முழுவதும் சுமார் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவுத் திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் கூறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரு. 1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால்தான் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்டு வந்துள்ளேன். மக்களின் பெரும் ஆதரவே திராவிட மாடல் சாதனையின் அடையாளம். மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன். திராவிட இயக்கம் உருவானதே சமூக உரிமைக்காகத்தான். தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையே சமூக நீதிதான். 100 ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி உரிமை சட்டம் வரக்காரணம் நீதிக்கட்சி தான். ஆனால் தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜ.க. அரசு தட்டி பறிக்கிறது. இட ஒதுக்கீடு, சமூக நீதிக்கு எதிரான திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது.

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய பா.ஜ.க. அரசு என்ன செய்தது?. சீனப்பட்டாசுகளை இந்தியாவில் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்வோம் என கூறினார்கள். ஆனால் இன்று வரை சட்ட விரோதமாக சீனப்பட்டாசுகள் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லி மற்றும் மும்பையில் கோடிக்கணக்கான சீனப் பட்டாசுகள் கைப்பற்றபட்டன. இதனால் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகள் ரூ. 1000 கோடி அளவுக்கு சரிவை சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்துள்ள நேரத்தில், ஆடம்பரப் பட்டியலில் பட்டாசை சேர்ந்து 28 சதவிதம் ஜி.எஸ்.டி. வரி விதித்த கட்சிதான் பாஜக. கொரோனாவிற்கு பின் பட்டாசு தொழில் நலிவடைந்த போது மத்திய பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை.

பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என நாடகம் போடுகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்னை இருக்கிறதா?. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அதனால், அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று தான் பொருள்.

தேர்தல் வந்துவிட்டால் பிரதமர் மோடிக்கு மக்கள் மீது அன்பு வந்துவிடும் கேஸ் சிலிண்டர், டீசல் மற்றும் பெட்ரோல் விலையைக் குறைத்துவிடுவார். ஆனால் இதன் விலையை உயர்த்தியது யார்?. மகளிர் தினத்தன்று கேஸ் சிலிண்டர் விலையைக் குறைத்தார். எல்லாம் வருடமும்தான் மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் விலையைக் குறைத்ததில்லை. தேர்தல் வரும்போது தான் பிரதமர் மோடிக்கு கருனை வந்துவிடுகிறது. தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான குணம் அவருக்கு உள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நடத்தும் நாடகம் ஆகும்.

சொன்னதை செஞ்சிட்டுதான் உங்கள் முன் தெம்போடு நிற்கிறேன். பேசுகிறேன். ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்கல்வி படிக்கக் கூடாது என பா.ஜ.க. கூறுகிறது. சிறுபான்மையினருக்கு மட்டும் அல்ல பெரும்பான்மைக்கும் எதிரானது தான் பா.ஜ.க. அரசு. சமூக நீதியை நிலைநாட்ட இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். பிரதமர் மோடி உறுதியளிக்கும் வாக்குறுதிக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி செய்தது என்ன. கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சி இந்தியாவை படுகுழியில் தள்ளியது. இந்தியாவை மீட்க வேண்டும் அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்” எனப் பேசினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT