Advertisment

“மத்திய அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல” - ஓ.பி.எஸ். கருத்து!

Advertisment

What the Union Minister said is unacceptable OPS Opinion

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு நிதி வழங்கப்படும். தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத பட்சத்தில் 2,000 கோடி ரூபாயைத் தரச் சட்டத்தில் இடம் இல்லை. அரசியல் காரணங்களுக்காகவே தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு எதிர்க்கிறது. உள்ளூர் மொழிக்கு முதலிடம் என்ற தேசிய கல்விக் கொள்கையைத் தமிழக அரசு ஏற்கிறதா இல்லையா?. ஏற்றால் தான் நிதி” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார். இவரது பேச்சுக்குத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல என அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது, 23.01. 1968 அன்று ‘மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத் திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது. பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையை தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கடைபிடித்தார்கள். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் ஜெயலலிதா ஆவார். இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.

இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம். எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

funds
இதையும் படியுங்கள்
Subscribe