What is the purpose of the Singapore Japan trip?; Chief Minister at a press conference

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை 11:25 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தில் சென்னையிலிருந்து சிங்கப்பூர் செல்கிறார். 8 நாள் அரசு முறை பயணமாக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். முதல்வரின் இந்த வெளிநாட்டுப் பயணத்தில், முதலமைச்சர் மனைவி துர்கா ஸ்டாலின், முதல்வரின் உதவியாளர் தினேஷ், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் செயலாளர்கள் உமாநாத், அனுஜார்ஜ், தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், செய்தித்துறை இயக்குநர் மோகன் ஆகியோர் செல்கின்றனர்.

Advertisment

25 ஆம் தேதி வரை சிங்கப்பூரில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், பல்வேறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களைச்சந்திக்கிறார். இந்த சந்திப்பில் சில நிறுவனங்களுடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் எனத் தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளை தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்துள்ளார். 26 ஆம் தேதி சிங்கப்பூர் பயணம் முடிந்து முதலமைச்சர் ஜப்பான் செல்கிறார். அங்கும் முதலீட்டாளர்களைச் சந்திக்கிறார். இந்த வெளிநாட்டுப் பயணத்தில் குறைந்தபட்சம் 10,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத் தொழில்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

முதலமைச்சரின் பயணத்திற்கு முன் சென்னை விமான நிலையத்தில் கட்சியின் முக்கியப் பிரதிநிதிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசினை கொடுத்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2024 ஆம் ஆண்டு வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாடுகளுக்கு சென்று நாங்கள் அழைப்பு விடுத்துக்கொண்டுள்ளோம். அதன் அடிப்படையில் 9 நாள் பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு இந்த பயணத்தை நான் மேற்கொண்டுள்ளேன்.

இந்த பயணத்தில் தொழில் துறை அமைச்சரும், அரசுத் துறை உயரதிகாரிகளும் வருகிறார்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே இந்த பயணமும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதோடு முதலீட்டாளர்களை நேரிலும் மாநாட்டின் வாயிலாகவும் சந்தித்து பேச இருக்கிறேன். புதிய தொழில் ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருக்கிறது. இந்த பயணத்தின் முக்கிய நோக்கம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது தான்” எனக் கூறினார்.

Advertisment