Advertisment

“உளவு அமைப்புகளுக்கு தெரியாதது, உள்துறை அமைச்சருக்கு தெரிந்திருக்கிறது..” - கே.எஸ்.அழகிரி காட்டம்

publive-image

சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஜூலை.21) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “இந்தியாவின் ஜனநாயகத்திற்கும் குடியரசுக்கும், பாதுகாப்பிற்கும் இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதனை பாஜக அரசு, மோடி அரசு மூடி மறைக்கிறது. இதனைக் கண்டு பொதுமக்கள் கிளர்ந்து எழ வேண்டும். இல்லை என்றால் நாடு அடிமைப்படுத்தப்பட்டுவிடும். இஸ்ரேல் நாட்டின் மென்பொருளைக் கொண்டு நமது நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், அரசு அதிகாரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழிலதிபர்கள், ஊடகங்கள் என சுமார் 300 பேரின் தொலைபேசி இணைப்புகள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக உள்ளது. எங்கள் தலைவர் ராகுல்காந்தியின் பேச்சும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. நமது நாட்டு ராணுவ ரகசியங்கள் கூட கண்காணிக்கப்பட்டுள்ளது. இந்த சதித் திட்டத்திற்கு மோடி அரசாங்கம் துணை போயுள்ளது. இந்தியாவின் மூன்று முக்கிய உளவு அமைப்புகளுக்குக் கூட இது தெரியவில்லை. ஆனால் நமது உள்துறை அமைச்சருக்குத் தெரிந்திருக்கிறது. பிரதமருக்குத் தெரிந்து இருக்கிறது. இதில் இந்தியாவின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது.

Advertisment

நம் வீட்டில் நடப்பது அண்டை நாடுகளில் தெரிகிறது. ஜனநாயகத்தையே சீரழிக்கும் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. தன்னுடைய உளவு அமைப்புகளைக் கூட இந்திய அரசு நம்பவில்லை. அதிகாரிகள், நீதிபதிகள், ஊடகவியலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமர் மோடி மக்களவையில் இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நீதிபதி ஒருவரை நியமித்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். நம் நாட்டிற்கு சும்மா கிடைத்தது அல்ல சுதந்திரம். இதற்காக பல தலைவர்கள் போராடி ஜெயில் வாழ்க்கையை அனுபவித்து உள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் தற்போது தடுப்பூசி விவகாரத்தில் பிரதமர் மோடி தனது இரண்டு நண்பர்களுக்கு மட்டுமே உற்பத்தி உரிமையை வழங்கி இருக்கிறார். டெல்லி, குஜராத், கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் சொல்வது ஏற்புடையது அல்ல. தொலைபேசி ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரத்தில் நாளை (ஜூலை.22) சென்னையில் எனது தலைமையில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் செல்ல உள்ளோம். அரசு அனுமதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் இது நடைபெறும்” என்றார். இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செந்தில்நாதன், மாநிலச் செயலாளர் சித்தார்த்தன், நகரத் தலைவர் பழனி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe