Advertisment

அடுத்தடுத்து என்ன செய்யணும்? ரஜினிக்கு தொடர் அட்வைஸ்... கொம்பு சீவிவிடும் பாஜக!

பாஜகவுக்கு ஆதரவான திராவிட எதிர்ப்புக் கருத்துகளை வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் ஊதிவிட்டுவிட்டு கூலாக இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த் ! அவர் வீசும் ஒவ்வொரு பேச்சும் ட்ரெண்டிங்காகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ஒரு வார பத்திரிகையின் விழாவில் அவர் பேசிய கருத்துக்கள் தேசிய அளவில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்த, ரஜினி வாய்ஸின் பின்னணியில் பாஜகவின் அசைண்மெண்ட் இருக்கிறது என்பதே அழுத்தமான தகவல்களாக டெல்லியிலிருந்து எதிரொலிக்கின்றன.

Advertisment

ஆன்மீக அரசியல் தொடங்கி, போர் வந்தால் களமிறங்குவோம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை வரவேற்கப்பட வேண்டியவை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் போராட்டங்களால் நாடு சுடுகாடாகி விடும், மோடியையும் அமீத்சாவையும் ராமர்-லட்சுமணனாக பார்க்கிறேன், தேசிய குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு என ரஜினி வீசிய ஒவ்வொரு பேச்சும் எதிர்மறை சர்ச்சைகளை உருவாக்கியது.

rajinikanth

அந்த வகையில் பத்திரிகை பொன்விழாவில் பேசிய ரஜினி, முரசொலியை ''வைத்திருந்தால் திமுககாரர் ; துக்ளக்கை வைத்திருந்தால் அறிவாளி என்று கொளுத்திப் போட்டதுடன், சேலத்தில் பெரியார் தலைமையில் நடந்த பேரணியில் ராமர்-சீதையின் புகைப்படங்களுக்கு செருப்பணிந்து நிர்வாணமாக அழைத்து சென்றார்கள். அதனை பிரசுரிக்கும் தைரியம் துக்ளக்கிற்கு மட்டும்தான் இருந்தது. பிரசுரித்த சோவுக்கு அப்போதைய கலைஞர் அரசு கடுமையான நெருக்கடியைத் தந்தது. சோவை ஆளாக்கிய இரு எதிரிகளில் ஒருவர் பக்தவச்சலம், மற்றொருவர் கலைஞர் ‘’ என்ற ரஜினியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Advertisment

பொதுவாக தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுக்கும் போதெல்லாம் தனது கருத்தை வாபஸ் வாங்கும் வகையில் அதனை மறுத்து பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பார் ரஜினி. ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக கண்டனங்களும், மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற குரல்களும் வலுத்த நிலையில், மன்னிப்பு கேட்க மாட்டேன் என அழுத்தமாக சொல்லி விட்டார் ரஜினி. இதனால் அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்தன.

rajinikanth

ரஜினியின் பேச்சுக்கு கண்டனங்களும் காவல் நிலையப் புகார்களும் அதிகரித்த நிலையில், தனக்கு நெருக்கமான பாஜக தலைவர்கள், அரசியல் நண்பர்கள், அரசியல் விமர்சகர்கள், தேர்தல் வியூக நிபுணர்கள் என பலரிடமும் விவாதித்தார் ரஜினி. அவர்களோ, "எந்த சூழலிலும் உங்கள் கருத்தை வாபஸ் வாங்காதீர்கள். நீங்கள் பேசியதில் தவறேதும் இல்லை. திமுகவை பலகீனப்படுத்த பெரியார் கொள்கைகளை நீங்கள் விமர்சிப்பதுதான் சரியாக இருக்கும் " என எரியும் எண்ணெய்யில் நெய் வார்த்து வருகின்றனர்.

இந்த விவாதங்கள் குறித்து நாம் விசாரித்தபோது, ‘’ தமிழகத்துக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த வருடம்தான் என்பதால் ஜூன் மாதம் துவங்கவிருந்த தனது அரசியல் கட்சியை, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளார் ரஜினி. அதற்குள் இரண்டு புதிய படங்களை முடித்து விடவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறார். பாஜகவின் நேரடி அரசியலுக்குள் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் ரஜினி, அரசியலுக்கு வரும் பட்சத்தில், ' நான் தனித்து இயங்குவதுதான் சரியாக இருக்கும். எனக்கு கிடைக்கிற ஒவ்வொரு வெற்றியும் உங்களுக்கானதுதான் ' என ஏற்கனவே அமீத்சாவிடம் உறுதியாகச் சொல்லி விட்டார்.

rajinikanth

அதனால் ரஜினியை பாஜகவுக்குள் கொண்டு வருவதையும் அல்லது அவருடன் கூட்டணி வைப்பதையும் விட , தமிழகத்தில் திராவிட சித்தாந்தத்தை ஒழித்தாலே திமுக, அதிமுகவின் வாக்கு வலிமையை சிதறடிக்க முடியும். அந்த சிதறல்களை ஒரு முகப்படுத்தினாலே நாம் எதிர்பார்க்கும் தேர்தல் வெற்றியை அடைய முடியும் என அண்மைக்காலமாக திட்டமிட்டு வருகிற பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும், திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் இந்து சமூக வாக்குகளை அக்கட்சியிலிருந்து உடைக்க வேண்டும் என தீராத தாகத்தில் இருக்கிறது. திமுகவிடமிருந்து உடைக்கப்படும் இந்து சமூக வாக்குகளை ரஜினி என்கிற பிம்பத்தின் மூலம் மட்டுமே ஒரு முகப்படுத்த முடியும் எனவும் நம்புகிறது ஆர்.எஸ்.எஸ்.!

அதாவது, தமிழகத்திலுள்ள சிறுபான்மையினரான கிருஸ்துவ மற்றும் முஸ்லீம் சமுக வாக்குகளும் தலித் அல்லாத இந்துக்களான பிற சாதிகளின் வாக்குகளும்தான் திமுகவின் பலம். அனைவருக்கும் பொதுவான நபராக ரஜினியை உருவகப்படுத்தினாலும் அவரை பாஜகவின் 'ட்ரேட் மார்க்' காவே சிறுபான்மையினர் கனித்திருப்பதால் சிறுபான்மையினரின் ஆதரவு அவருக்கு கிடைக்கப்போவதில்லை.

அதனால் திமுகவுக்கு வலிமையாக உள்ள சிறுபான்மையினர் வாக்குகளை ரஜினி பக்கம் திருப்புவது அவ்வளவு எளிதானதல்ல. அதேசமயம், 'இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக' என நிலை நிறுத்துவதன் மூலம் இறை நம்பிக்கையையும் கடந்து பொதுவான அரசியலை விரும்பும் இந்துக்களை ரஜினி பக்கம் கொண்டு வர முடியும் என கணக்கிட்டுள்ளது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.சும்! தேர்தல் வியூக வல்லுநர்கள் சிலரும் இதே திட்டத்தை முன்மொழிந்துள்ளனர். ரஜினியும் இதனை ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் திமுகவை சீண்டுவது என்கிற கோட்பாட்டை வரையறை செய்து ரஜினிக்கு கொடுத்துள்ளது பாஜக ! முக்கியமாக, திமுக உயர்த்திப் பிடிக்கும் பெரியாரிய கொள்கைகளையும் திராவிட இயக்க செயல்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குவதுதான் ரஜினிக்கு கொடுக்கப் பட்டுள்ள அசைண்மெண்ட் ! இந்த பின்புலத்தில்தான் பத்திரிகை விழாவில் பெரியார் பேரணியை அவர் சீண்டியது ‘’ என்று விவரிக்கிறார்கள்.

rajinikanth

திமுகவின் ஆதார சுருதியாக இருக்கும் பெரியாரை அவமதித்தால் எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வரும் என்பதை உணராதவரில்லை ரஜினி. அதனை தெரிந்தே தான் விமர்சித்தார். இந்த சர்ச்சை ஒரே நாளில் முடிந்து விடக்கூடாது என காய்களை நகர்த்திய பாஜக தலைமை, ரஜினியை தைரியப்படுத்தியிருக்கிறது. மேலும், பாஜகவின் சுப்பிரமணியசாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினியிடம் விவாதித்திருக்கிறார்கள்.

அது குறித்து நம்மிடம் பேசிய ரஜினியின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள், ‘’ மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிற கண்டனங்கள் எழுவதால், தவறாக எதையும் பேசவில்லை. மன்னிப்பு கேட்க மாட்டேன் என உடனடியாக விளக்கமளிக்க ரஜினி தயாரானார். அப்போ, சுப்பிரமணியசாமி, மன்னிப்பு கேட்கமாட்டேன் என்பதை உடனடியாக சொல்ல வேண்டாம். ஒரு வாரம் கழித்துச் சொல்லுங்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார்.|

அதாவது, கடவுள்களை செருப்பால் அடித்தார்கள் என்கிற பிரச்சனை மக்கள் மத்தியில் பதிய வேண்டுமெனில் ரஜினிக்கு எதிரான எதிர்ப்புகள் வலுவடைய வேண்டும். அதேசமயம், ஹைட்ரோ கார்பன், தேசிய குடியுரிமை உள்ளிட்ட மத்திய அரசுக்கு எதிரான கிளர்ச்சிகள் அமுங்க வேண்டும். அதற்காகவே ரஜினி உருவாக்கிய சர்ச்சை குறைந்த பட்சம் ஒரு வாரம் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என நினைத்து ரஜினிக்கு யோசனைத் தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட ரஜினி, 14-ந்தேதி கிளப்பிய சர்ச்சைக்கு, மன்னிப்பு கேட்க மாட்டேன் ; நான் பேசியதில் தவறேதுமில்லை என ஒரு வாரம் கழித்து 21-ந்தேதி விளக்களித்தார் ‘’ என்கின்றனர்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் ரஜினிக்கு எதிராக திமுகவும் தி.க.வும் வலிமையாக களமிறங்கி ரஜினியைக் கொச்சைப்படுத்தினால், அண்ணா-கலைஞர்-திமுக பற்றி பெரியார் செய்துள்ள விமர்சனங்களையும், அண்ணாவும் கலைஞரும் பெரியாரை பற்றி விமர்சித்தவைகளையும் சேகரித்து ரஜினிக்கு கொடுத்து வருகின்றனர். மேலும், 1971-ல் சேலத்தில் நடந்த மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு குறித்து துக்ளக்கில் சோ பிரசுரித்த கட்டுரையை தற்போது பிரசுரிக்க ஆடிட்டர் குருமூர்த்தியும் தயாராகி வருகிறார்.

ஆக, ரஜினி என்கிற பிம்பத்தை வைத்து அடித்து ஆடத் துவங்கியிருக்கிறது பாஜக ! இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் கிளர்ந்தெழுவதால் சூடாகவே இருக்கிறது பெரியார் மண் !

Anna kalaingar admk politics rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe