Skip to main content

“வாக்குப்பதிவு முடிந்த நாளன்று தென்னரசு என்ன சொன்னார்?” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கே.எஸ்.அழகிரி கூட்டாகப் பேட்டி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

What did the thennarasu say on the day the voting ended?- EVKS Ilangovan, KS Alagiri jointly interviewed

 

பல்வேறு பரபரப்புகளை கடந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்று முடிந்தது. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 981 வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.

 

இந்நிலையில், வெற்றி பெற்ற வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

 

கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''முதல்வரின் இரண்டாண்டு கால சிறந்த ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ். பொதுமக்கள், உழைக்கின்ற மக்கள், பெண்கள் இவர்களெல்லாம் இந்த ஆட்சியினுடைய செயல்பாடு திருத்தி அளித்திருக்கிறது என்பதற்கான சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். குடிநீர் அவர்களுக்கு கிடைக்கிறது, தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது, பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள், மழைநீர்; கழிவுநீர் அகற்றம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இந்த அடிப்படை காரணங்கள் தான் இந்த வெற்றிக்கு ஒரு மூலகாரணம். அதேபோல் ராகுல் காந்தியினுடைய இந்திய ஒற்றுமை பயணம் தமிழகத்தில் ஒரு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பமும் அரசியல் சார்ந்த குடும்பம். நூறாண்டு காலமாக ஈரோடுக்கும் தமிழகத்திற்கும் அரும்பணியாற்றிய குடும்பம். இவைகளெல்லாம் சேர்ந்து மகத்தான வெற்றியை கொடுத்தது. குறிப்பாக தமிழக முதல்வரின் அயராத உழைப்பு; இந்த தேர்தலில் அவர் காட்டிய மிகப்பெரிய ஆர்வம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து இந்த வெற்றியை எங்களுக்கு ஈட்டிக் கொடுத்திருக்கிறார்.

 

பாஜகவாக இருந்தாலும் அதிமுகவாக இருந்தாலும் ஒரு தெளிவு இல்லாமல் இருந்தார்கள். எங்கள் கூட்டணிக்கு ஒரு தெளிவு இருந்தது. எங்கள் கொள்கைகளை நாங்கள் அழுத்தமாகச் சொன்னோம். ஆனால், அவர்களுக்கு தெளிவில்லை. சலனத்தோடு இருந்தார்கள். சில இடங்களில் மோடியின் படங்களை அதிமுக பயன்படுத்தினார்கள். சில இடங்களில் பாஜகவின் கொடியைக் கூட அவர்கள் பயன்படுத்தத் தயாராக இல்லை. எனவே, இவையெல்லாம் எங்களுடைய வெற்றிக்கு அடிப்படைக் காரணம்.  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர். அயராது உழைக்கக் கூடியவர்'' என்றார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ''அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு வாக்குப்பதிவு முடிந்த நாளன்று மாலையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, தேர்தல் சுமூகமாக முடிந்தது. தேர்தல் ஆணையம் மிக நியாயமாக நடந்து கொண்டது. எந்த தவறும் நடக்கவில்லை. ஈரோட்டை பொறுத்தவரை நாங்கள் எல்லாம் நாகரீகமானவர்கள். எந்த தவறும் ஏற்படவில்லை என்பதை தெளிவாகச் சொல்லியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் தோற்றுவிட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொடுத்ததை அவர் சொல்கிறார்'' என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆளும் கட்சியை வீழ்த்தி சுயேட்சை வேட்பாளர் நிகழ்த்திய சாதனை; படுதோல்வியில் நிதிஷ்குமார்!

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
independent candidate won at byelection in bihar

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்குக் கடந்த 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகள் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இதேபோன்று விக்கிரவாண்டி தொகுதியையும் சேர்த்து இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடந்தது. இதில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

இதில் பீகாரின் ரூபாலி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் கலாதர் பிரசாத் மண்டல், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி சார்பில் பீமா பாரதி ஆகியோர் போட்டியிட்டனர். இதில், லோக் ஜன சக்தி சார்பில் ஏற்கெனவே எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வந்த சங்கர் சிங், தற்போது அந்த தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். 

இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் 68,070 வாக்குகள் பெற்று பெற்றியிருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் கலாதர் பிரசாத் மண்டல் 59,824 வாக்குகள் பெற்று 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால், பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. 

Next Story

“விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி” - ராமதாஸ்

Published on 13/07/2024 | Edited on 13/07/2024
Ramadoss said that Real victory for PMK in Vikravandi by-election

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குவித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளார். இந்த நிலையில் இந்த தேர்தலில் பாமகவிற்கே உண்மையான வெற்றி என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,261 வாக்குகள் பெற்றிருக்கிறார். முடிவு எப்படி  இருந்தாலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை பா.ம.க. தலைவணங்கி ஏற்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆளுங்கட்சி அதன் அத்துமீறலை  தொடங்கி விட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவிர மீதமுள்ள 33 அமைச்சர்களும், 125 க்கும் கூடுதலான சட்டப்பேரவை உறுப்பினர்களும் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு பணத்தையும், பரிசுப் பொருட்களையும் வெள்ளமாக பாயவிட்டனர். ஒவ்வொரு நாளும் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுத்து அரிசி மூட்டை, மளிகை சாமான், வேட்டி  சேலை, தங்க மூக்குத்தி, தினமும் ரூ.300 முதல் ரூ.500 வரை பணம் என வாரி இறைக்கப்பட்டது. மது ஆறாக பாய்ந்தது. ஊருக்கு ஊர் பிரியாணி சமைத்து வாக்காளர்களுக்கு விருந்து வைத்தனர். நிறைவாக ஒவ்வொரு வாக்குக்கும் ரூ.3000 வரை பணம் வழங்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு ஓட்டுக்கும் ரூ.10,000 வரை திமுக வழங்கியது.

அந்த வகையில் திமுகவின் வெற்றி என்பது அரிசி மூட்டைகளுக்கு கிடைத்த வெற்றி, டோக்கனுக்கு கிடைத்த வெற்றி, வேட்டி & சேலைகளுக்கு கிடைத்த வெற்றி, தங்க மூக்குத்திகளுக்கு கிடைத்த வெற்றி, மளிகை சாமான்களுக்கு கிடைத்த வெற்றி, வெள்ளமாக பாய விடப்பட்ட மதுவுக்கு கிடைத்த வெற்றி, திமுக சார்பில் செலவழிக்கப்பட்ட ரூ.250 கோடிக்கு கிடைத்த வெற்றி. இவை அனைத்துக்கும் மேலாக விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவின் தொண்டர் அணியினராகவே மாறி, திமுகவின் தேர்தல் விதிமீறல்களை வேடிக்கைப் பார்த்தது மட்டுமின்றி, அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை நின்றார்கள். அந்த வகையில் இது திமுகவும், தேர்தல் அதிகாரிகளும், காவல்துறையினரும் அமைத்திருந்த கள்ளக் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி.

மறுபுறத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியது. பாட்டாளி மக்கள் கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வீடு வீடாக சென்று மக்களைச் சந்தித்து திமுக அரசின் மக்கள்விரோத செயல்பாடுகள் குறித்தும், சமூக அநீதி குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர். அதைக் கூட தடுக்கும் வகையில் மக்களை அழைத்துச் சென்று பட்டிகளில் அடைத்து வைத்தனர். இத்தனை அடக்குமுறைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சி.அன்புமணி 56,255 வாக்குகளை  குவித்திருக்கிறார். இது 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு கிடைத்த 32,198 வாக்குகளை விட  75 விழுக்காடு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுங்கட்சி சார்பில் பணமும், பரிசுகளும் வாரி இறைக்கப்பட்ட போதிலும், அவற்றை புறக்கணித்து விட்டு  56,261 வாக்காளர்கள் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களித்திருப்பது ஜனநாயகத்திற்கும், பா.ம.க.வின் மக்கள் பணிக்கும் கிடைத்த வெற்றி ஆகும். அந்த வகையில் விக்கிரவாண்டி தொகுதியில் உண்மையான வெற்றி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தான் கிடைத்திருக்கிறது. பணத்தை வாரி இறைத்து திமுக பெற்ற வெற்றி தற்காலிகமானது. 2026 தேர்தலில் பா.ம.க. மாபெரும் வெற்றியை பெறுவது உறுதி.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு  56,261 வாக்குகள் பெற்ற பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிரவாண்டி தேர்தலில் பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பா.ம.க. மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், களப்பணி ஆற்றிய பா.ம.க மற்றும் கூட்டணி கட்சிகளின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.