Skip to main content

“மோடி சொன்னதென்ன? தமிழக முதல்வர் செய்ததென்ன?” - தீவிர வாக்கு சேகரிப்பில் சி.என்.அண்ணாதுரை

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
“What did Modi say? What did the Tamil Chief Minister do?” - CN Annadurai in serious vote collection

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்நிலையில், திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரை திமுக அரசின் நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது “மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிற தமிழக முதல்வரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு சட்டமன்ற தேர்தலின் போது நமது முதல்வர் வாக்குறுதிகளைக் கொடுத்தார். சொன்ன வாக்குறுதிகளையும் செய்தார், சொல்லாதவற்றையும் செய்திருக்கிறார்”.

பிரதமர் மோடி என்ன செய்திருக்கிறார் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம் என்றார். கேஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்றார். ரூ.400 இருந்த சிலிண்டர் 1000 ரூபாயாக விலை ஏறிப்போய் விட்டது. எல்லோரின் அக்கவுண்ட்டிலும் 15 லட்சம் போடுவேன் என்றார். 15 பைசா கூட போடவில்லை. பெட்ரோல், டீசல் விலைவாசியைக் குறைப்போம் என்றார், குறைக்கவில்லை, விலை தான் ஏறிப்போச்சு. வரியினை ஏற்றியதால் தாய்மார்கள் வாங்கும் தங்கம் 52 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மக்களிடம் வரியின் மூலமாக பிடுங்கி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  சலுகை கொடுக்கிறது மோடி அரசு. இந்த தேர்தலில் தான் அந்த அரசினைத் தூக்கி எரிய வேண்டியது முக்கியமானதாகும்.

நமது முதல்வரோ ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை செய்வேன் என்றார். செய்து கொண்டிருக்கிறார். மகளிர் உதவித்தொகை ரூ.1000 மாதம் தருவதாகச் சொன்னார், தந்து விட்டார். விடுபட்டவர்களுக்கு விரைவில் வழங்கவுள்ளார். கட்டணமில்லா பேருந்து பயணத்தை சாத்தியமாக்கியிருக்கிறார். நமது குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார். பெண் குழந்தைகளின் கல்லூரி படிப்பிற்கு மாதம் ஆயிரம் ரூபாய் தந்திருக்கிறார். கொரோனா உதவி தந்திருக்கிறார். விவசாயக் கடன் தள்ளுபடி செய்திருக்கிறார். 

இந்தப் பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதியாக மகளிர்குழு கடன் தொகை வட்டியில்லா கடனாக தரப்படும் என்றிருக்கிறார். மகளிர் குழு பெண்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றிருக்கிறார். இப்படியாக எண்ணற்ற திட்டங்களை தமிழக முதல்வர் வாரி வழங்கியிருக்கிறார். வழங்கவும் உள்ளார். அவரின் வேட்பாளராக உங்கள் முன்னே உதயசூரியனுக்கு வாக்கு கேட்டு வந்திருக்கிறேன். ஏற்கெனவே எனக்கு வாய்ப்பு அளித்திருந்தீர்கள். மீண்டும் மக்களுக்காக பணியாற்ற வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.    

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.