Advertisment

‘திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியது என்ன?’ - வெளியான தகவல்!

What did the CM say in the DMK MP  meeting  Information released

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (22.11.2024) திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், “நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. அதற்கு நீங்கள் புறப்படுவதற்கு முன், உங்களை ஒரு சேர அழைத்துச் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாவது முறை ஆட்சி அமைத்த பிறகு பா.ஜ.க.விடம் முன்புபோல பரபரப்பு இல்லை என்று சொன்னாலும், தங்களுடைய அஜெண்டாவை எப்படியாவது நிறைவேற்றுவதில் கவனமாக இருக்கிறார்கள். எனவே, அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது. நம்முடைய கொள்கைகளில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாம் தீர்மானத்தில் சொல்லியிருக்கும் கருத்துகள் பற்றியும் உங்கள் தொகுதி சம்பந்தப்பட்ட விவகாரங்கள் பற்றியும் பேசுங்கள்.

Advertisment

நம்முடைய தீர்மானத்தில், நாம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடி, தமிழ்நாட்டிற்கான தேவைகள் என்ன என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். அதைப் பற்றி எல்லாம் நீங்கள் பேச வேண்டும். மாநில அரசை நடத்துவதில் நாம் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினையே நிதி நெருக்கடிதான். எனவே, நிதி உரிமைகளை பெறும் வகையில் உங்கள் பேச்சு அமைய வேண்டும். மத்திய அரசின் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதில்லை என்பதைக் குறிப்பிட்டுப் பேசி, புதிய திட்டங்களை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்யுங்கள். இந்தக் குரலை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்ப வேண்டும். மென்மையாகப் பேசக் கூடாது. கடுமையாகப் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் எவ்வளவு முக்கியமானதோ, அதைவிடப் பல மடங்கு முக்கியமானது வர இருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தல். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையான பங்களிப்பைக் கொடுக்க வேண்டும்.

Advertisment

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை அறிக்கையாகத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். உங்கள் நாடாளுமன்றத் தொகுதிக்குள் இருக்கும் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் உங்களுக்கான இலக்காக இருக்க வேண்டும். எம்.எல்.ஏ., எம்.பி., பதவிகளைவிடக் கட்சியில் முக்கியமான பதவி என்றால், அது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்புதான். எனவே, அவர்களுக்கு உரிய மரியாதையை நீங்கள் கொடுக்க வேண்டும். அதேபோலதான், ஒன்றிய - பகுதி - பேரூர்க் கழகச் செயலாளர்களும், அவர்களுக்கும் உரிய மரியாதையையும், முக்கியத்துவத்தையும் தந்து, உங்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர்களைப் பங்கேற்க வைக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தொகுதிப் பார்வையாளர்கள் நியமனம் செய்திருக்கிறோம். அவர்களுடன் ஆலோசனை நடத்துங்கள். ஒரு தொகுதியைக்கூட இழக்கக் கூடாது என்று இலக்கு வைத்துக் கொள்ளுங்கள். தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாகப் பயன்படுத்துங்கள். எம்.பி.க்கள் செயல்பாடு சிறப்பாக இருந்தால், நம்முடைய வெற்றி இன்னும் எளிதாக இருக்கும். கால அட்டவணைப்படி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பயணம் செய்யுங்கள். மாநில உரிமைகளுக்காக,தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளுக்காக,தொகுதி மக்களின் தேவைகளுக்காக, உங்கள் நாடாளுமன்றப் பணிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்துங்கள்” எனப் பேசியுள்ளார்.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe