Advertisment

’நாங்கள் ஆட்சிக்கு வரத்தான் போகிறோம்’- துரைமுருகனுக்கு ராமதாஸ் பதிலடி

rs

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பா.ம.க சார்பில் இளைஞர் எழுச்சி ஆண்டு, ஊழல் ஒழிப்பு ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கடலூர் (வடக்கு) மாவட்ட தலைவர் குமாரகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

Advertisment

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், ’’நாட்டில் இருக்கிற எல்லா நோய்களையும் விட ஊழல் நோய் தான் மிகவும் மோசமானது. ஊழல் இருக்கும் நாடு வளர்ச்சி பெறாது. உலகில் உள்ள 180 நாடுகளில் மக்கள் வாழ்வதற்கு தகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 80-வது நாடாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில் ஊழல் அதிகம் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருக்கிறது. திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக மாறிமாறி ஆட்சிக்கு வந்ததால் ஊழல் அதிகம் இருக்கிறது. அதனால்தான் தமிழகத்தில் வளர்ச்சியே இல்லை.

Advertisment

காவிரியில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் 50 அடி ஆழத்துக்கு மணல் அள்ளியதால் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் ஆறுகளில் மணல் அள்ளுவதை தடுக்க வேண்டும்.

தமிழகத்தில் விவசாயம் அழிந்து கொண்டு வருகிறது. நஞ்சையும், பூஞ்சையும் விளைந்த மண் வீட்டுமனைகளாக ஆகிவிட்டது. காவிரி ஆற்றில் 5 கி.மீ. தூரத்துக்கு ஒரு தடுப்பணை கட்ட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார். ஆனால் ஆறு சமவெளியாக இருக்கிறது எனவே தடுப்பணை கட்ட முடியாது என்று முதலமைச்சர் தெரிவிக்கிறார். இதுகுறித்து அவருடன் விவாதிக்க அன்புமணி ராமதாஸ் தயாராக இருக்கிறார்.

ஏற்கனவே தி.மு.க. ஆட்சியின் போது சட்டசபையில் பா.ம.க எம்.எல்.ஏக்கள் தடுப்பணை கட்டுவது குறித்து வலியுறுத்திய போது துரைமுருகன், 'நீங்கள் ஆட்சிக்கு வந்து தடுப்பணை கட்டுங்கள்' என்றார்.

நாங்கள் ஆட்சிக்கு வரத்தான் போகிறோம், தடுப்பணை கட்ட தான் போகிறோம். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உருவாக்க முடியும். தமிழகத்தில் 40 சதவீதம் இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் மாற்றத்தை கொண்டு வருவார்கள். வயதான பெண்களுக்கு அரசியல் தெரியாது. வாக்குக்கு பணம் என்கிற நிலையை மாற்றக்கூடிய சக்தி இளைஞர்களிடம் உள்ளது. தமிழகத்தில் குடியில் அழிந்த குடும்பங்கள் ஏராளம் உண்டு. மதுவை ஒழிக்கவும் மாற்றம் வேண்டும்.

படித்தவர்கள் அரசியல் சாக்கடை என்று ஒதுங்குவதை விட்டுவிட்டு தூய்மையான அரசியலை ஏற்படுத்த, நல்லவர்களை தேர்வு செய்து வாக்களிக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 5 கோடியே 95 லட்சம் வாக்காளர்கள் நினைத்தால் மாற்றம் வரும். இல்லையேனில் ஏமாற்றமும், அழிவும் தான் நடக்கும். தமிழகம் மேலும் மேலும் கீழே சென்றுவிடும். அந்த நிலை வராமல் வாக்காளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

கூட்டத்தில் பா.ம.க மாநில தலைவர் ஜி.கே.மணி, பொருளாளர் கவிஞர் திலகபாமா, மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, புதுவை மாநில அமைப்பாளர் தன்ராஜ், மாநில துணை பொது செயலாளர்கள் பழ. தாமரைக்கண்ணன், அசோக்குமார், முன்னாள் மா நில துணைப்பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாநில துணை தலைவர்கள் வைத்திலிங்கம், சண்முகம், முருகவேல், செந்தில்குமார், மகளிர் சங்க செயலாளர் தமிழரசி, மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர்.

ramadas
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe