Skip to main content

“தொழிலாளர்கள் உரிமைகளைப் பறிக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” - அமர்ஜித் கவுர்

Published on 22/04/2023 | Edited on 22/04/2023

 

“We will never allow workers to take away their rights” – Amarjit Kaur

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும், அக்கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யின் தேசிய பொதுச் செயலாளருமான அமர்ஜித் கவுர் 22ம் தேதி கோவையில் உள்ள கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது அவர் கூறியதாவது, “இன்றுள்ள தொழிலாளர் நலச் சட்டங்கள் தொழிலாளி வர்க்கத்தின் 150 ஆண்டு கால தொடர் போராட்டத்தின் விளைவாக பிறந்தவை. அவற்றை திருத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் 1920 இல் துவங்கப்பட்டது. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தின் தொடர் போராட்டத்தின் விளைவாக தொழிற்சங்கச் சட்டம், இழப்பீட்டுச் சட்டம், பணிக்கொடை சட்டம், பி.எப் சட்டம் என பல்வேறு சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. 

 

எட்டு மணி நேர வேலையும் ஏ.ஐ.டி.யூ.சி.யின் போராட்டத்தால் விளைந்ததே. தற்போது தமிழ்நாடு அரசு 8 மணி நேரம் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தி சட்டம் இயற்றியுள்ளது. இதை நாங்கள் ஏற்கமாட்டோம். தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் செய்கிற போது அரசு தொழிற்சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த சட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் தொடர்ந்து போராடுவோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கமும் தொழிலாளர் உரிமைகளுக்காக, தேசிய வளர்ச்சிக்காக நிற்கிறது. தொழிலாளர்கள் உரிமைகளை  பறிக்கவும், நாட்டை சீரழிக்கவும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 

 

மோடி தலைமையிலான பாஜகவின் ஒன்றிய அரசு தொடர்ந்து தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் விரோதத் திட்டங்களை அமலாக்கி வருகிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். கார்ல் மார்க்ஸ் பிறந்த தினமான மே 5ம் தேதி முதல் தமிழகத்தில் பாத யாத்திரைகள், இரண்டு சக்கர வாகன பயணங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இது நாடு தழுவிய அளவிலும் நடைபெறும்.

 

ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் விவாதம் இன்றி முடிக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. நல்வாழ்வு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற ஏழை கூலித் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள், பன்னாட்டு நிதி மூலதன நிறுவனங்களுக்கு ஆதரவான பட்ஜெட். 

 

புதிய வேலைவாய்ப்புகள் இல்லை. காலி பணியிடங்கள் நிரப்ப திட்டம் எதுவும் இல்லை. நாட்டில் 60 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளது. மூன்று இடங்கள் காலியாக உள்ளது என்றால் அதில் ஒரு இடம் தான் நிரப்பப்படுகிறது. மோடிக்கு மக்களைப் பற்றி கவலை இல்லை. அவர் கவலைப்படுவதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களைப் பற்றி மட்டும் தான். நாட்டின் செல்வமாக திகழ்ந்து வந்த நூறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு கொடுக்கப்பட்டுவிட்டன. இந்த தகவலை அரசு பாராளுமன்றத்தில் தெரிவித்தது. பொதுத்துறை சொத்துக்கள் 13 லட்சம் கோடிகளுக்கு மேல் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது என்று அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

 

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் 17 கோரிக்கைகளை முன்வைத்தார்கள். 13 மாதம் தொடர்ந்து நடைபெற்ற அந்த போராட்டத்தில் அவர்களது கோரிக்கை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. விவசாயிகளுடைய தொடர் போராட்டத்தின் விளைவாக வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. 

 

மோடி சொல்வது போல் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒன்றும் வரி செலுத்துவதில்லை. அவர்கள் செலுத்துவது வெறும் 2 சதவீத வரி தான். ஆனால், நடுத்தர மற்றும் சிறு குறு தொழில் செய்கிறவர்கள் தான் முழுமையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி. எல்லா இடத்திலும் உள்ளது. உற்பத்தியில், விநியோகத்தில், உணவுப் பொருட்களில் கூட ஜி.எஸ்.டி. உள்ளது.

 

காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு விரைவில் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி தற்போது சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தொழிலாளர் விரோதச் சட்டத்திருத்தத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனி கவனம் எடுத்து செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்