வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு... இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம்... விஜயகாந்த் உறுதி... 

dmdk

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் தே.மு.தி.க கட்சி துவக்க நாளான இன்று (14.09.2020) தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதில் தே.மு.தி.க நிர்வாகிகள், தே.மு.தி.க அணி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மகளிர் அணியினர், பகுதி, வட்டம், மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வெளியிட்டிருந்த அறிக்கையில், தே.மு.தி.க, தற்போது 16-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தொடங்கப்பட்ட தே.மு.தி.க, தொடர்ந்து மக்கள் பணியாற்றி, தனக்கென ஓர் இடத்தைப் பெற்றுள்ளது.

கரோனா பாதிப்பால் கடந்த 6 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களைச் சந்திப்பதோடு பலர் உயிரை இழந்துள்ளனர். இந்தச் சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள தே.மு.தி.க தொண்டர்கள், தொடர்ந்து பல்வேறு உதவிகளை ஏழை எளிய மக்களுக்குச் செய்து வருகின்றனர். தே.மு.தி.க தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும்.

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்பதைக் கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம். வரும் 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தே.மு.தி.க சிறப்பான வெற்றியைப் பெற்று மக்கள் சேவை ஆற்ற வேண்டும். அதற்கு நாம் தயாராக வேண்டும். “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற தாரக மந்திரத்தின்படி தே.மு.தி.க தொடக்க நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

dmdk vijayagath
இதையும் படியுங்கள்
Subscribe