We should form an alliance with the BJP Saidai Duraisamy recalls history

Advertisment

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த வாரம் டெல்லி சென்றிருந்தார். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்திருந்தது பேசு பொருளாகி இருந்தது. இதன் மூலம் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற தலைப்பில் அதிமுக மூத்த தலைவரும், சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “9ஆம் வகுப்பு படிக்கின்றபொழுதே பேனா நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி எம் ஜி ஆரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து இன்று வரை அதிமுகவின் அடிதளத்தொண்டன் என்பதிலும் அதி.மு.கவின் முதல் தியாகி என்பதிலும் பெருமை கொண்டவன். பதவிக்காகவும், ஆதாயத்திற்காகவும் நான் அதிமுகவில் இல்லை என்பதை என்னுடன் தோளுக்குத்தோள் இணைந்து கட்சிப்பணி செய்த சகாக்களுக்கும் தொடர்களுக்கும் நன்கு தெரியும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜா- அணி ஜெ அணி இணைப்புக்கும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முன்னாள் முதல்வர்களான எடப்பாடி பழனிசாமி - ஓ. பன்னீர்செல்வம் இணைப்புக்கும் என எல்லா காலாட்டத்திலும் அதிமுக ஒற்றுமைக்கு பணியாற்றியிருக்கிறேன் என்ற தகுதியில் கட்சி நிர்வாகிகளுக்கு இன்று அதிமுகவுக்கு சில ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறேன்.

எம்ஜிஆரின் பெரும்புகழைப் பேசுவது, சுவரொட்டி மற்றும் போர்களில் பெரிய அளவில் முதன்மைப்படுத்துவது, பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒற்றுமைப்படுத்துவது, பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளை ஒருங்கிணைத்து பலமான கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துவது. அதிமுகவின் குலதெய்வம் எம்.ஜி.ஆர். அந்த குலதெய்வத்தின் கொள்கை வழி நின்று அவரது புகழை, சிறப்பை இன்னும் அதிகமாக முதன்மைப்படுத்த வேண்டும் திரைப்படத்தில் சொன்ன கருத்துக்களை எல்லாம் ஆட்சியில் செய்து காட்டியவர்.

Advertisment

இன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அராஜகம், அரசியல் கொள்ளை, ஊழல் போன்றவற்றிலிருந்து தமிழகத்தை மீட்டு, மீண்டும் மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவேண்டும் கட்சியின் தொண்டர்களை 1972இல் செய்ததைப் போன்று உற்சாகமாகப்படுத்த பணியாற்றிய, அந்த பழைய நிலைக்கு கொண்டுசெல்ல வேண்டும். கட்சிக்கு ஏன் இந்த தொடர் தோல்விகள், தொண்டலுக்கு ஏன் இந்த சோர்வு, இந்த தோல்வியை எப்படி தவிர்க்கலாம் என்று சிந்தித்தால் கட்சியின் ஒற்றுமை. கூட்டணி பலம் ஆகியவற்றின் தேவை புரியும். தொண்டர்களையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல புரட்சித்தலைவர் மேற்கொண்ட சில அரசியல் முடிவுகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

 We should form an alliance with the BJP Saidai Duraisamy recalls history

மத்திய அரசுடன் நட்போடு பழகி தேர்தலில் கூட்டணி அமைத்தே தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்திராகாந்தி தஞ்சாவூர் இடைத்தேர்தலில் போட்டியிட கூட்டணி கட்சியான அதிமுக அனுமதி கொடுக்காததால் உறவு முறிந்தது. பிறகு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸுடன் தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் அதிமுக 2 இடங்களை மட்டுமே பெற்று தோல்வி அடைந்தது. இந்திராகாந்தி மீண்டும் பிரதமரானார், தமிழகத்தில் எம்.ஜி.ஆரின் ஆட்சி கலைக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தில் மக்களிடம் சென்று, 'என்ன தவறு செய்தேன் என் ஆட்சியை கலைத்தார்கள்? தீர்ப்பளியுங்கள்' என்று வேண்டுகோள் விடுத்தார். மீண்டும் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தார். அதன் பிறகு, காங்கிரஸுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து திமுகவை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

Advertisment

அதன் அடையாளமாக திருப்பத்தூர் இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளரான அருணகிரிக்கு தானே வலியச் சென்று ஆதரவு கொடுத்தார். தி.மு.க கூட்டணியை பிரிக்கவேண்டும் என்பதற்காக காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வெற்றிபெற வைத்தார். இது அன்றைய அரசியலில் மிகப்பெரிய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. மத்திய அரசுடன் நல்ல நட்பு உருவானது. 1984ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதித்திருந்தபோது இந்திராகாந்தி நேரடியாக வந்து பார்த்து, அவர் வெளிநாட்டில் உயர்தரச் சிகிச்சை பெறுவதற்கு தேவையான வசதிகளை செய்து தந்தார். 1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அ திமுக காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதிமுகவுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டபோது மத்திய அரசின் உதவிகள் பெருமளவு பயனிதந்தது. இப்படி அரசியல் முடிவுகள் எடுக்கின்றபோது கட்சி நலன், மக்கள் நலள், தொண்டர்கள் நலன் என்ற வகையில் எம்.ஜி.ஆரின் அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும். எம்.ஜி.ஆர் மத்திய அரசோடு எப்போதும் மோதல் போக்கை கடைப்பிடிக்கமாட்டார். இந்த அணுகுமுறைகளைக் கடைப்பிடித்தால் கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லலாம்.

 We should form an alliance with the BJP Saidai Duraisamy recalls history

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, மறப்போம் மன்னிப்போம் எனவே ஒற்றுமையுடன் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல மத்திய பாஜக கட்சியோடு இணைந்து பலமான கூட்டணி அமைந்து இந்தத் தேர்தலில் வெற்றிபெற வண்டும். 2026 தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியைக் காப்பாற்ற முடியாது என்று ஒவ்வொரு அடி மட்டத் தொண்டர்களும் வருத்தப்பட்டு, 'இந்தக் கருத்துக்களைக் கட்சி நிர்வாகிகளிடம் எடுத்துச் சொல்லி மாற்றுவதற்கு முயற்சி எடுக்க மாட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அவர்களின் ஆதங்கத்தையே இந்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறேன். எம்.ஜி.ஆரை முதன்மைப்படுத்துங்கள், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் விசுவாசிகளையும் திமுக எதிர்ப்பாளார்களையும் ஒற்றுமைப்படுத்துங்கள். பாஜக மற்றும் தோழமைக் கட்சிகளையும் இணைத்து 2026இல் பலமான வெற்றி கூட்டணி அமைத்து கட்சியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.