Advertisment

“நிலைமையைக் கைமீறவிடாமல் தடுக்க நாம் அனைத்து வழிகளையும் முயற்சிக்க வேண்டும்..” சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

publive-image

Advertisment

கரோனாவின் இரண்டாவது அலை மிகத் தீவிரமடைந்துவருகிறது. வரும் மே மாதத்தின் முதல் வாரத்தில் கரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்தை அடையுமென வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதே பல மருத்துவமனைகளில் படுக்கைகளுக்குத் தட்டுபாடு நிலவுகிறது. அதேபோல், இந்தியாவில் பல இடங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும்இதற்கு மதுரை மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், வரப்போகும் நாட்களில் மதுரையின் நிலை என்னவாக இருக்கப்போகிறது என்பதைச் சிந்தித்து மாவட்ட நிர்வாகம் கூடுதல் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Advertisment

ஏப்ரல் 28ஆம் தேதி வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்ப்போமேயானால் தற்போது மதுரையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1068;தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 1047;வீட்டுத் தனிமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 1,105 ஆகும்.

கடந்த பத்து நாட்களின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அடுத்த பத்து நாட்கள் எப்படி இருக்கும் எனக் கணித்தோமேயானால், மே 5ஆம் தேதியுடன் தனியார் மருத்துவமனைகளின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும். மே 9 அல்லது 10ஆம் தேதியோடு அரசு மருத்துவமனைகளின் அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிடும் சூழல் உள்ளது.

நிலைமையைக் கைமீறவிடாமல் தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் நாம் முயற்சி செய்ய வேண்டும். குறிப்பாக மாவட்ட நிர்வாகம் கோவிட் பரிசோதனைகளை அதிகப்படுத்துவது அடிப்படையான பணி. அவற்றில் போதிய அளவு முன்னேற்றமில்லை. நமக்கு ஈடான மக்கள்தொகையைக் கொண்ட கோவை மாவட்டத்தில், தினசரி பரிசோதனை அளவு 10 ஆயிரமாக இருக்கிறது. ஆனால், நாம் இன்னும் 7 ஆயிரத்திலேயே இருக்கின்றோம்.

தொற்றாளர்களை அதிகமாகவும் விரைவாகவும் கண்டறிந்து, மருத்துவ நடவடிக்கைக்கு உட்படுத்துவதுதான் நோய்ப் பரவலைத் தடுப்பதற்கான அடிப்படைப் பணி. எனவே மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் உடனடியாக தினசரி பரிசோதனையின் அளவை 15 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

அதேபோல மதுரையில் இயங்கும் அனைத்து வகையான சந்தைகளிலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஒழுங்கமைக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட வியாபாரிகளிடம், நிர்வாகிகளிடம் பேசி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, அரசு சொல்லியிருக்கும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும்.

மதுரை, கோவிட் கால நெருக்கடியை மிகச்சரியாக கையாண்டு மீண்டது என்ற நிலையை உருவாக்க அனைத்துத் தரப்பினரின் முழு ஒத்துழைப்பும், செயல்பாடும் தேவை. அதற்கு மாவட்ட நிர்வாகம் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

corona virus su venkatesan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe