Skip to main content

“4 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்துள்ளோம்” - தொல். திருமாவளவன் எம்.பி.

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
We have requested to allocate 4 seats Tol Thirumavalavan MP

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தலுக்கான பல்வேறு குழுக்களை உருவாக்கி அதற்கான அறிவிப்புகளைக் கொடுத்திருந்தது. அதன்படி கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திட நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் அமைச்சர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், நாடாளுமன்ற உறுப்பினர்களான திருச்சி சிவா, ஆ. ராசா மற்றும் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டுள்ள டி.ஆர். பாலு தலைமையிலான குழு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் இன்று (12.02.2024) மாலை 03.00 மணியளவில் பேச்சுவார்த்தை நடத்தியது. தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் வி.சி.கவினர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது சிதம்பரம், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகளை திமுகவிடம் விருப்பப் பட்டியலாக வி.சி.க. அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட விரும்புகின்ற தொகுதிகளை பட்டியலிட்டு  தி.மு.க.வினரிடம் வழங்கி உள்ளோம். அதில் 3 தனித் தொகுதிகள், ஒரு பொதுத் தொகுதி என 4 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். கொள்கை சார்ந்து இயங்கக்கூடிய கூட்டணியாக தி.மு.க. கூட்டணி விளங்கி வருகிறது. இது இந்தியா வரை விரிவடைந்து இந்தியா கூட்டணியாக உருவாகியுள்ளது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

 டயர் குடோனில் பயங்கர தீ விபத்து!

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Terrible fire accident in tire godown in chennai

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூர் சுங்கச்சாவடி அருகே டயர் குடோன் ஒன்று இயங்கி வருகிறது. இந்த குடோனில், டயர்கள், எண்ணெய் டிரம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த இடத்தில் திடீரென பயங்கர தீ பற்றி எரிந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ மளமளவென பரவி அந்த பகுதி முழுவதும் பல அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து மேலெழும்பி வருகிறது. மேலும், இந்த பகுதியில் மாநகர சுகாதார மருத்துவமனை இயங்கி வருவதால், அங்கு இருக்கக்கூடிய நோயாளிகள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இந்த தீ விபத்து சம்பவம் குறித்து அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், இங்கு தீயை அணைக்க முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேசிய கட்சியாக மாறும் விசிக?

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
vck about becoming a national party

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆட்சியைத் தக்க வைக்க பாஜகவும், இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்கக் காங்கிரஸ் கட்சியும் படுதீவிரமாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு  திமுக, காங்கிரஸ், விசிக, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். மற்றொரு புறம் பாஜக என்.டி.ஏ கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகளை ஒருங்கிணைத்து வருகிறது. 

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக தமிழகத்தில் 4 தொகுதிகளில் போட்டியிட திமுக தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அந்த 4 தொகுதிகளிலும் தனிச்சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி சென்றுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் பானை சின்னம் ஒதுக்கக் கோரி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர்.

அதன் பிறகு டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “நாடாளுமன்றத் தேர்தலில் விசிக போட்டியிடவுள்ளோம். அதனால் எங்களுக்குப் பானை சின்னத்தை ஒதுக்க வேண்டும். அதற்காக நாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக வந்தோம்; ஆனால் முன் அனுமதி பெறவில்லை என்பதால் எங்களால் தேர்தல் ஆணைய அதிகாரிகளைப் பார்க்க முடியவில்லை. அதற்கான தனிப் பிரிவில் எங்களைக் கோரிக்கையை மனுவாக சமர்ப்பித்துள்ளோம். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் விசிக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம். அதனால் விசிகாவிற்கு சுயேட்சை சின்னத்திலிருந்து பானை சின்னதை பொது சின்னமாக முன்கூட்டியே அதனை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கான மனுவை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு; அது சுதந்திரமாக செயல்பட வேண்டும்.  விருப்பு வெறுப்பு இன்றி , ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இன்றி செயல்பட வேண்டும்” என்றார். 

விசிக வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்களா அல்லது பானை சின்னத்தில் போட்டியிடுவார்களா என்று கேள்விக்கு, “கடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்கள் 6 தொகுதிகளிலுமே பானை சின்னத்தில் நின்றோம். அப்போது திமுக எங்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் நிற்கச் சொல்லி எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்கவில்லை. ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அந்த மாதிரி சொன்னார்கள்; அப்போது வெற்றியைக் கருத்தில் கொண்டு மட்டுமே அந்தமாதிரி கூறினார்கள்” என்று பதிலளித்தார்.