Skip to main content

"எனது விருப்பம், ஆசை மற்றும் கனவு எல்லாம் இதுதான்" - ஸ்டாலினின் செயல்பாடு குறித்து நாஞ்சில் சம்பத்!

Published on 07/06/2021 | Edited on 07/06/2021
"We have come to ask from Russia who this Stalin is" - Nanjil Sampath is proud

 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியானது. அதில் திமுக கூட்டணி வெற்றிபெற்றதையடுத்து, மே 7ஆம் தேதி பதவி ஏற்பு நிகழ்வானது நடைபெற்றது. அதில் முதல் முறையாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுகொண்டார். இந்நிலையில், கடும் நெருக்கடியான சூழலில் தமிழகத்தின் முதல்வராக  ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. திமுகவின் இந்த ஒருமாத கால ஆட்சி குறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், பற்றாளருமான நாஞ்சில் சம்பத்திடம் பேசினோம். அதில் அவர் நம்முடைய கேள்விக்கு கூறிய பதில் பின் வருமாறு,

 

ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு அவரது செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

 

எனக்கு தெரிந்து நான் 1989ல் இருந்து தமிழ்நாட்டின் அரசியலை ஒரு மாணவனைப் போல் கவனித்து வருகிறேன். தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழகத்தின் மக்களுடைய நெஞ்சங்களில் ஆழமாகப் பதிந்து வருகிறது. இப்படி ஒரு முதலமைச்சருக்கு தமிழ்நாட்டின் மக்கள் தவம் இருக்க வேண்டும். அவ்வாறு அவருடைய நடவடிக்கைகள் அமைந்திருக்கிறது. ஒரு ஒத்திசைவு இல்லாத மாற்றங்கள் நிறைந்திருக்கின்ற, மத்திய அரசை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?, நிதிநிலைமை எப்படி சரிசெய்யப் போகிறார்? கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றப் போகிறார்? என மில்லியன் டாலர் கேள்விகள் இந்த சூழலில் எழுந்திருக்கின்றது.

 

முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். முதல் கையெழுத்தாக பால் விலையில் 3 ரூபாய் குறைத்ததன் மூலம் 2 லட்சம் லிட்டர் பால் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. நிதி நெருக்கடி இருக்கிறது என்று தெரிந்ததற்கு பிறகும் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு, கடந்த ஆட்சியில் தராத 4 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாகத் தருவேன் எனச் சொல்லி, முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் தமிழ்நாட்டில் அனைவருக்கும் கிடைத்துவிட்டது. இவ்வாறு அவர் போட்ட ஐந்து கையெழுத்து மூலம் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் பிறந்த தலைவன் மு.க.ஸ்டாலின் என்பதை அவர் நிரூபித்தார்.

 

அது மட்டுமில்லாமல் கரோனா பெருந்தொற்று என்கிற சுமையைத் தோளில் சுமந்து கொண்டுதான் அவர் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மத்திய அரசு, கரோனா இரண்டாம் அலை வருகிறது, அதை எதிர்கொள்ளத் திட்டம் வகுக்கவில்லை, அதுபற்றி கவலைப்படவுமில்லை. அதே போல் இந்தியாவில் உள்ள தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டு கரோனா ஒழிந்தது என்று கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் இன்று தடுப்பூசி, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு என்ன செய்வது என்ற நிலைமை வந்த பொழுது மேற்கு வங்காளம், மராட்டியம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலிருந்து ரயில்களில் ஆக்சிஜன் வந்துள்ளது. ரயில்களில் தண்ணீர் வந்துதான் நான் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் இப்பொழுது ஆக்சிஜன் வருகிறது. 

 

சர்வதேச அரங்கில், "இப்படி ஒரு முதலமைச்சரா, யார் அந்த ஸ்டாலின் ?" எனக் கேட்கிற நிலைக்கு வந்துள்ளது. மோடியின் சாம்ராஜ்யத்தில் ஒரு முதலமைச்சராக இருந்துகொண்டு சர்வதேச டெண்டர் விடும் இப்படி ஒரு முதுகெலும்பு இருக்கும் முதலமைச்சரா என்கிற அளவுக்குத் தமிழ்நாட்டைத் தகவமைப்பதற்கு இடையூறாது, தடையில்லாது இமை மூடாமல் இயங்குகிற இந்த முதலமைச்சர் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழ்ந்து எங்கள் அன்னை தமிழ்நாட்டைப் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என்பதே நாஞ்சில் சம்பத்தின் விருப்பம், ஆசை மற்றும் கனவு.  
 

 

 

சார்ந்த செய்திகள்