“உறுதியாகச் சொல்கிறோம் பாஜகவுடன் கூட்டணி இல்லை” - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

We definitely say no alliance with BJP  Edappadi Palaniswami

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அதே சமயம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், ஜெயக்குமார், கே.பி. முனுசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

இத்தகைய சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ‘அ.தி.மு.க. கூட்டணிக்காக பா.ஜ.க. கதவுகள் திறந்தே உள்ளன. தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி இருக்கிறதா என்று இனியும் கேள்வி கேட்க வேண்டாம். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இது குறித்து நான் ஏற்கெனவே பல முறை கூறிவிட்டேன். அ.தி.மு.க. முன்னனி தலைவர்களும் தெளிவுபடுத்திவிட்டனர். கடந்த 2023 செப்டம்பர் 25 ஆம் தேதி அன்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது.

அதன்பிறகும் கடந்த 5 மாத காலமாக மற்ற கட்சியினர் திட்டமிட்டு ஊடகங்களிலும், பத்திரிக்கைகளிலும் தவறான செய்தியை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். உறுதியாக சொல்கிறோம் அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் இல்லை, இல்லை. அதே நேரம் மக்களவைத் தேர்தலுக்காக அ.தி.மு.க. இன்னும் கூட்டணி அமைக்கவில்லை என்று சொல்கிறார்கள். எந்த நேரத்தில் அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில், சரியான நேரத்தில் கூட்டணி அமைப்போம்”எனத் தெரிவித்தார்.

admk Alliance Krishnagiri
இதையும் படியுங்கள்
Subscribe