ADVERTISEMENT

“நாங்கள் பயந்துவிட்டோம்; மனதெல்லாம் பதறுகிறது” - செல்லூர் ராஜு

06:01 PM Mar 12, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு சிவகங்கையில் நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது அதே விமானத்தில் வந்து பேருந்திலும் அவருடன் பயணித்த அமமுக கட்சி நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிசாமியை வீடியோ எடுத்து பேசினார். அதில், “எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்” என்று கூறியிருந்தார்.

இந்நிகழ்வு பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் மதுரை விமான நிலையத்தில் வைத்து அதிமுகவினர் அமமுக தொண்டரை தாக்கினர். அதனைத் தொடர்ந்து ராஜேஸ்வரன் மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலீசில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் ராஜேஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து ராஜேஸ்வரன் அளித்த புகாரின் அடிப்படையில், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “எடப்பாடி பழனிசாமி நேற்று சிவகங்கை பொதுக்கூட்டத்திற்கு மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் வரும் பொழுது ஒரு மோசமான கிரிமினல் ஒருவர் முன்னாள் முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறார். எவ்வளவு அசிங்கமாக அதை பேசலாமோ அந்த அளவிற்கு அதை பேசுகிறார். அதையும் கேட்டுக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பொறுமையாக இருக்கிறார்.

ஆனால் அவர் தொடர்ந்து கூச்சல் போடுகிறார். பழனிசாமியின் காவலுக்கு இருந்தவர் அந்த செல்போனை ஆஃப் செய்து வைக்கிறார். இதுதான் நடந்த சம்பவம். பேருந்து பயணம் முடித்து வந்தபோது பழனிசாமியுடனே அவரும் வருகிறார். இறங்கிய உடன் தனது சட்டையை துழாவுகிறார். ஏதாவது ஆயுதங்கள் வைத்துள்ளாரா என நாங்கள் பயந்துவிட்டோம். அவரை அப்படியே தள்ளிக்கொண்டு போய்விட்டார்கள் இது தான் சம்பவம். ஆனால் இந்த சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை திட்டமிட்டு அந்த வழக்கில் சேர்த்து அவரும் குற்றம் செய்தவர் என குற்றச்சாட்டை காவல்துறை பதிவு செய்துள்ளனர். பழனிசாமியின் மீதே துணிந்து பொய் வழக்கை இந்த அரசாங்கம் புனைந்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அந்த வழக்கை படித்தாலே மனதெல்லாம் பதறுகிறது. சாதாரண சட்டமன்ற உறுப்பினர் போல் அவரை நினைத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது இந்த அரசாங்கம் எந்த அளவிற்கு அவர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டு” எனக் கூறினார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT