அண்ணாமலையின் 'என் மண்;என் மக்கள்' பேரணியைத்துவங்கி வைக்க ராமநாதபுரம் வந்திருந்த மத்திய அமைச்சர் அமித்ஷா திமுக அரசை விமர்சித்துப்பேசியிருந்தார். அவரது உரையில், ''இந்த ஆட்சி ஊழல் புரிபவர்களின் ஆட்சி. குற்றம் புரிபவர்களின் ஆட்சி. இந்த அரசு மின் பகிர்மான கழகத்தில் ஊழல் புரிந்த அரசு. ஏழை மக்களுக்கு விரோதமான அரசு. அவர்கள் செய்த பல கோடி ரூபாய் ஊழல் தமிழக மக்கள் முன் வெளியே வந்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கிறார்கள். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது.

Advertisment

அந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கூட கைதாகி உள்ளார். கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும். காங்கிரஸ், திமுக என்றாலே நிலக்கரி, 2ஜி ஊழல் போன்ற ஊழல்கள் தான் நினைவுக்கு வரும்.” இவ்வாறு தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர். அதில் 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி திமுக தான் என அமித்ஷா கூறியுள்ளாரே' என்ற கேள்விக்கு, ''அவருடைய தரத்திற்கு உகந்த பேச்சு அது அல்ல. திமுகவின் மீது கொஞ்சம் கூட ஆதாரம் இல்லாமல் ஒரு சேற்றை வாரி பொத்தாம் பொதுவாக வீசுகிறார். அப்படி எடுத்துப் பார்த்தால் அவர்களுடைய கட்சியில் எத்தனை பேர் ஊழல் பண்ணி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் நாங்கள் பட்டியல் போட்டுத்தரத்தயாராக இருக்கிறோம்.” என்றார்.

'பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணம் எந்த மாதிரியான அரசியல் மாற்றத்தைக் கொடுக்கும்' என்ற கேள்விக்கு, ''அதைப்பற்றி எல்லாம் எனக்குத்தெரியாது'' என்றார்.