'We are the only ones with the strength and leadership to save Tamil Nadu from the BJP' - M.K. Stalin's speech at the general assembly

Advertisment

மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று (01.06.2025) தொடங்கி நடைபெற்றது. பொதுக்குழு மேடைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையில் உள்ள அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு உள்ளிட்டோர் மேடையில் இடம் பெற்றுள்ளனர். அதேபோல் அமைச்சர் மூர்த்தி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ.ராசா உள்ளிட்டோரும் மேடையில் இருந்தனர்.

முன்னதாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங், பெரியார் சிந்தனையாளர் ஆனைமுத்து, போப், சீதாராம் யெச்சூரி, சங்கரய்யா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றி பேசுகையில், ''ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்க இருக்கிறோம். இங்கு வந்திருக்கக்கூடிய நிர்வாகிகளை நானே தொடர்பு கொண்டு ஃபோனில் பேசுவேன். அப்போது எத்தனை உறுப்பினர்கள் சேர்த்தீர்கள் என சொல்ல வேண்டும். இந்த பணியை மிகச் சிறப்பாக செய்வீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். ஜூன் முதல் வாரத்தில் இருந்து திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்திக்க உள்ளேன். என்னைப் பொறுத்தவரை நீங்கள் எல்லோரும் ஒரு உறுதிமொழி எடுக்க வேண்டும். 'என் வாக்குச்சாவடியில் திமுக கூட்டணியை வெற்றி பெற வைப்பேன்; என் தொகுதி வெற்றி தொகுதி' என்ற உறுதி மொழியை எல்லோரும் எடுத்துக்கொள்ள வேண்டும். பாஜகவிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்றுகின்ற கட்சி கட்டமைப்பையும், வலிமையான தலைமையும் நம்மிடம் மட்டும் தான் இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்த பொழுது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு மேட்டுப்பாளையம் வழியாக கோவைக்கு வந்து கொண்டிருக்கிறேன். வழியெல்லாம் மக்கள் சாலை ஓரங்களில் நிற்கிறார்கள். எனக்கு விமானம் கொஞ்சம் லேட் என தகவல் வந்தது. அதனால் கொஞ்சம் ஸ்லோவாக நாலு பேர் இருந்தாலும் நின்று பேசி விட்டு வந்தேன். வேகமாக போகவில்லை. அப்போது ஒரு பத்து பதினைந்து பேர் ஒரு இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள்.

Advertisment

 'We are the only ones with the strength and leadership to save Tamil Nadu from the BJP' - M.K. Stalin's speech at the general assembly

கையில் ஒரு பேப்பர் வைத்திருந்தார்கள். பெட்டிஷன் தானே கொடுங்கள் என கேட்டேன் கொடுத்தார்கள். ரொம்ப சிரிச்ச முகம்; நடுத்தர குடும்பத்தை தாண்டி இருக்கக்கூடிய குடும்பமாக இருக்கலாம் அந்த அம்மா. வயது 55 இருக்கும். மனு கொடுத்தாங்க. வாங்கிக்கொண்டோம். பின்னர் காரில் செல்லும்போது 'ஒரு அம்மா மனு கொடுத்தாங்களே.. அந்த அம்மா பார்க்க வசதியாக இருக்கிற மாதிரி இருந்தாங்க. என்ன மனு கொடுத்திருக்காங்க'' என கேட்டேன். அவர் கொடுத்த மனுவில் 'நான் திமுக வெறி பிடித்தவள். இந்த ஆட்சி பல திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் நிறுத்துவதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. அதை விட்டு விடாதீர்கள். எங்கள் உறவினர்கள் எல்லாம் மாற்று கட்சி, எதிர் கட்சி தான். நான் மட்டும்தான் திமுக. சமாளித்துக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்' என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். மனுவில் கோரிக்கையே இல்லை. இதுதான் ஆச்சரியமாக போய்விட்டது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பும் நான் வழங்கி இருக்கிறேன். அதை சிறப்பாக எந்த விமர்சனம் இல்லாமல் செய்து காட்டினால் அதைவிட எனக்கு மகிழ்ச்சி இருக்க முடியாது. எனக்கு தெரிந்தது அரசியல் மட்டும் தான். கலைஞராக இருந்தால் கவிதை எழுதுவார்; கதைகள் எழுதுவார்; சினிமா வசனம் எழுதுவார்; பேசுவார்; ஆனால் நான் 'அரசியல்... அரசியல்... உழைப்பு... உழைப்பு...' என வளர்த்தேன். டிவி பார்த்தால் கூட நியூஸ் சேனல் தான் பார்ப்பேன். சோசியல் மீடியா பார்த்தாலும் அரசியல் பேட்டிகளை தான் பார்ப்பேன். ஒருவரை நம்பி ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் அதை சிறப்பாக செய்ய வேண்டும். சொன்னதை முடித்து விட்டேன் என சொல்ல வேண்டும். நான் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது வெற்றி செய்தியை மட்டும் தான். நான் கொடுத்த பொறுப்பை சரியாக செய்து வெற்றி செய்து கொடுங்கள் என்பதுதான் இந்த பொதுக்குழுவின் செய்தி. திமுக இருக்கும் வரை, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை டெல்லி படையெடுப்புக்கும் தமிழ்நாடு வீழாது. தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கி இருக்கும் இந்த பயணத்தை சட்டமன்ற தேர்தல் பொதுத்தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதில் ஒன்றாக சந்திப்போம்'' என்றார்.

.