Skip to main content

தண்ணீர் பிரச்சனை... அதிமுக வேட்பாளரை விரட்டிய பொதுமக்கள்

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிவபதி போட்டியிடுகிறார். இவர் முன்னாள் அமைச்சராக இருந்தவர் என்பதால் இந்தமுறை எப்படியும் பெரம்பலூர் தொகுதியில் சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று ஆரம்பம் முதலே முழு மூச்சாக இருந்தார். ஆனால், இவருக்கு சீட்டு கொடுக்க கூடாது என்று அதிமுகவில் உள்ள முக்கிய முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் சிவபதி முதல்வர் எடப்பாடிக்கு நேரடியாக அறிமுகம் உள்ளவர் என்பதால் அவருக்கு சீட்டு கிடைத்தது. 

 

Water problem...  The people who refused the ADMK candidate

 

சிவபதி யாருடைய துணையும் இல்லாமல் தன்னிச்சையாக சீட்டு வாங்கியதால் கட்சியினர் யாரையும் சட்டை செய்யாமல் தேர்தல் களத்தில் நிற்கிறார் என்கிறார்கள். கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள். 

 

பெரம்பலுார் தொகுதி பாடலுார் அருகே ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் உள்ள செட்டிகுளம், மாவலிங்கை, தேனூர், கண்ணப்பாடி, டி.களத்தூர், அடைக்கம்பட்டி, நக்கசேலம், புது அம்மாபாளையம், புதுவிராலிப்பட்டி, பழையவிராலிப்பட்டி, சிறுவய லூர், குரூர், மங்கூன் உள்ளிட்ட கிராமங்களில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன், சிதம்பரம் எம்.பி சந்திரகாசி, பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியம், தே.மு.தி.க மாவட்ட செயலாளர் துரை.காமராஜ், உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகளுடன் வேட்பாளர் சிவபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
 

அப்போது செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அபிஷேகம் செய்துவிட்டு புறப்பட்ட வேட்பாளர் சிவபதி, செட்டிகுளம், மாவலிங்கை கிராமத்தின் வழியாக கண்ணப்பாடி சென்றார். அப்போது அங்கு காத்திருந்த பெண்கள் காலிக்குடங்களுடன் தண்ணீர் கேட்டு மறியல் செய்ய முயன்றனர். ஆனால், அங்கிருந்த நிர்வாகிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனையடுத்து வேட்பாளர் சிவபதி, டி.களத்தூர் கிராமத்திற்கு சென்றார். அங்குவந்த பொதுமக்கள் ‘கடந்த தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் நன்றி தெரிவிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அதன்பின் இதுவரை திரும்பிகூட பார்க்கவில்லை. தேர்தலுக்கு தேர்தல் ஓட்டு கேட்க மட்டும்தான் வருவீர்களா?’ என்றனர். மேலும், பொதுமக்களின் தண்ணீர் பிரச்சனைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சரமாரி கேள்வி எழுப்பினர். அதனை தொடர்ந்து சிவபதி அங்கிருந்து உடனடியாக புறப்பட்டு சென்றார். 
 

அதன்பின் அடைக்கம்பட்டி, நக்கசேலம் ஆகிய கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதனை கேட்ட வேட்பாளர் சிவபதி தண்ணீர் பிரச்சனையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துவிட்டு, அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டு சென்றார். தொடர்ந்து 4 கிராமங்களிலும் தண்ணீர் பிரச்சனையை பொதுமக்கள் எழுப்பியதால் அடுத்த கிராமங்களில் அனைத்து பகுதிக்கும் செல்லாமல் நெடுஞ்சாலையிலேயே சென்றவாறு வாக்கு கேட்டு சென்றார். 
 

ஆலத்தூர் தாலுகா பகுதியில் வாக்கு கேட்க வந்த முதல்நாளே பல்வேறு கிராமங்களில தண்ணீர் பிரச்சனையை தொடர்ந்து பொதுமக்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனாலும் சிவபதி இந்த மாவட்டங்களில் பெரும்பான்மையாக இருக்கும் முக்கிய தலைவர்கள் ஆர்.விஸ்வநாதன், செல்வகுமார் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருப்பதால் கண்டிப்பாக ஜெயித்துவிடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார்.
 

 

 

சார்ந்த செய்திகள்