Advertisment

சட்டமன்ற தேர்தல் கூட்டணி; மா.செ கூட்டத்தில் தலைமைக்கு தே.மு.தி.க.வினர் வலியுறுத்தல்!!

Want to make alliance with dmk.. dmdk members

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தே.மு.தி.க. ஒன்றிய செயலாளர் திருமணத்துக்கு கடந்த வாரம் வந்த பிரேமலதா விஜயகாந்த், அந்த திருமணத்தை நடத்தி வைத்துவிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்குத் தயாராக இருக்கிறோம். அதுபோல் இந்த நிமிடம் வரை நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம்.” என்று கூறிவிட்டுச் சென்றார்.

Advertisment

இந்த நிலையில்தான், கடந்த 13ஆம் தேதி சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தே.மு.தி.க.வின் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் வந்தும்கூட, உடல்நிலை சரியில்லாததால் பேசவில்லை. ஆனால், கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசும்போது, “கடந்த தேர்தல்களில் நடந்த தவறை இம்முறை செய்யமாட்டோம். இது தே.மு.தி.க.விற்கு ஒரு நெருக்கடியான தேர்தல். இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் கட்சியின் அங்கீகாரத்தைத் தேர்தல் ஆணையம் பறித்துவிடும். எனவே தேர்தல் கூட்டணி அமைப்பதில் கவனமுடன் இருக்கிறோம். அதிக எண்ணிக்கையில் சீட்டு வழங்கும் கட்சியுடன்தான் இம்முறை கூட்டணி அமைக்கப்படும்.” என அதிரடியாக அறிவித்தார். “அதோடு கடந்த காலங்களில் தேர்தல் கூட்டணியை முடிவு செய்வதில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்த முறை அப்படி ஏற்படாது. ஜனவரியில் நடக்கும் செயற்குழு பொதுக்குழுவில் கூட்டணி குறித்து அறிவிப்பை விஜயகாந்த் வெளியிடுவார். நிர்வாகிகள், தொண்டர்கள் மகிழும் வகையில் கூட்டணி முடிவு இருக்கும். தேர்தல் பிரச்சாரத்திற்கும் விஜயகாந்த் வருவார்” என்று கூறினார்.

Advertisment

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு கூட்டணியில் இருக்கிறோம் என்று சொன்ன பிரேமலதா விஜயகாந்த், திடீரென ஜனவரியில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடும் என்று சொல்வதற்கு என்ன காரணம் என ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றுவந்த பல தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களிடம் கேட்டபோது, தமிழகத்தில் உள்ள 64 மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொண்ட இந்த ஆலோசனைக் கூட்டம் மூன்று மணி நேரம் நடந்தது. முதலில் பிரேமலதா பேசும் போது, உங்கள் தொகுதியில் உள்ள தேர்தல் பணிகள் மற்றும் பேரூர் கிளை, நகரம், ஒன்றிய பகுதிகளில் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் வரும் தேர்தலில் என்ன நினைத்திருக்கிறார்கள் அதுபோல் நீங்களும் என்ன நினைக்கிறீர்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லுங்கள் என்று கூறினார். அதைத்தொடர்ந்து தான் சில மாவட்ட செயலாளர்களும்கூட, அ.தி.மு.க. வுடன் பா.ம.க. பாஜக. கூட்டணி இருப்பதால் தொடர்ந்து அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டாம் தனித்துகூட நின்று விடலாம். அ.தி.மு.க. கூட்டணியில் நமக்கு மரியாதையும் இல்லை மதிப்பதும் இல்லை என்று கூறினார்கள். ஆனால் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களோ, இந்த முறை தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தான் நல்லது எங்களைப் போல் உள்ள கட்சி பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் மதிக்கக் கூடியவர்களாக தி.மு.க. பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள் அதைத்தான் மாவட்ட பொறுப்பாளர்களும் தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு கூட்டம் என்று நடத்தினார்கள் என்றால் கூட்டணிக் கட்சியினரை மதித்து மேடையில் அமர வைக்கிறார்கள். அந்த அளவுக்குக் கூட்டணி கட்சியினருக்கு மரியாதை கொடுக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வில் தேர்தல் நேரத்தில் மட்டும் நம்மைப் பயன்படுத்திக்கொண்டு மற்ற நேரங்களில் கண்டுகொள்வதில்லை. அமைச்சரையோ, சட்டமன்ற உறுப்பினரையோ நாடிச்சென்று ஏதாவது உதவி கேட்கப் போனால்கூட போங்க பார்க்கலாம் என்று கூறுகிறார்களே தவிர எந்த உதவியும் இதுவரை செய்ததில்லை. நம்மையும் கண்டு கொள்வதில்லை.

அப்படிப்பட்ட ஆளுங்கட்சியினருடன் மீண்டும் கூட்டணி வைப்பது என்பது நமது கட்சி வளர்ச்சியைப் பாதிக்கும். அதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால்தான் நம் கட்சியையும் வளர்க்க முடியும் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களையும் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று கூறினோம். இதை எல்லாம் பொறுமையாகக் கேட்ட பின்புதான் பிரேமலதா, அதிரடியாக ஜனவரியில் பொதுக்குழு செயற்குழுவைக் கூட்டி கூட்டணி அறிவிக்கப்படும் என்று சொன்னது. இது எங்களுக்கு எல்லாம் ஒரு புது தெம்பை உருவாக்கியிருக்கிறது.

ஆனால், கடந்த தேர்தலில் இதேபோல் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதன்பின் விஜயகாந்த்தும் பிரேமலதாவும் என்ன முடிவை எடுத்தார்களோ? தெரியவில்லை அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விட்டனர். ஆனால், இந்த முறை 50க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களுமே அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொறுப்பாளர்கள் தொண்டர்களின் கருத்தைத் தெள்ளத் தெளிவாகவே வெளிப்படுத்தி தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று கூடியிருக்கிறோம்.

அதனடிப்படையில் வரும் சட்டமற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறும் என்று நம்புகிறோம். இல்லை என்றால் கட்சிப் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று கூறினார்கள்.

admk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe