Guziliamparai dmk

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் இருக்கும் குஜிலியம்பாறை திமுக ஒன்றியச் செயலாளர் சீனிவாசனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தங்கள் பகுதியில் கரோனா நிவாரண உதவிகள் என்னென்ன செய்தீர்கள் என்று கேட்டார்.

Advertisment

அதற்கு சீனிவாசன், எங்கள் ஒன்றியப் பகுதிகளில் நிவாரண உதவிகள் எல்லாம் துணைப் பொதுச் செயலாளர் மற்றும் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனையின்படி வழங்கிவிட்டோம். மருத்துவ உதவிகள் தான் கொஞ்சம் வழங்க வேண்டும் என்று கூறியவாரே, எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள் ஒன்று இருக்கிறது, விநாயகர் சதுர்த்தி என்பது ஆரியர்களுக்குச் சொந்தமானது எனவும் இந்தியாவிலேயே அவர்களுக்குத்தான் விநாயகர் சொந்தமெனவும் நினைக்கிறார்கள். அதனால் உங்களுடைய ஆலோசனையின்படி விநாயகர் சதுர்த்தியின்போது திராவிட விநாயகரை வைத்து வழிபடுவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என எண்ணுகிறோம். தாங்கள் ஆணை பிறப்பித்தால் திராவிட விநாயகரை வைக்க தயாராக இருக்கிறோம். விநாயகர் சதுர்த்தி வைத்து ஆரியர்கள் அரசியல் பண்ணுகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாமியைக் கும்பிட மாட்டோம் என்று எண்ணுகிறார்கள். அதனால விநாயகர் சதுர்த்தியில் திராவிட விநாயகரை வைத்து வழிபட வேண்டும். அதற்குத் தங்கள் ஆதரவு தர வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

இப்படித் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர் ஒருவர் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என்று ஸ்டாலினிடம் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு இந்த விஷயம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் பரவி வருகிறது

Advertisment

இது சம்பந்தமாக ஒன்றியச் செயலாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, விநாயகர் சதுர்த்தியை வைத்துக்கொண்டு பிஜேபியினர் ஓவராக ஆட்டம் போட்டு வருகிறார்கள். அதன் மூலம் தான் இந்தியாவிலேயே அரசியல் பண்ணுகிறார்கள். அதனாலதான் விநாயகர் சதுர்த்தியின்போது நாமும் செல்வ விநாயகர், சித்தி விநாயகர், வரம் தரும் விநாயகர் என்று சொல்வது போல் "திராவிட விநாயகர்" என்ற பெயரை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என்று தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினேன். அது எனது சொந்தக் கருத்தும் கூட. தந்தை பெரியார் கொள்கையைக் கடைப்பிடித்து வந்தாலும் கூட தலைவர் கலைஞர் ஆட்சியின் போதுதான் முதன் முதலில் கோவில்களில் அறநிலையத்துறையவே கொண்டு வந்தார். அதுபோல் அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்களாக இருக்கலாம் என்றும் கலைஞர் கொண்டு வந்தார். அந்த அளவுக்குக் கோயில்களுக்கும் கலைஞர் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். அப்படி இருக்கும் போது பிஜேபியினர் மட்டும் விநாயகரைச் சொந்தம் கொண்டாடக் கூடாது என்ற நோக்கத்தில் தான் நாமும் திராவிட விநாயகர் என்ற பெயரில் வரும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடலாம் என்று தலைவரிடம் கூறினேன் என்றார். குஜிலியம்பாறை ஒன்றியச்செயலாளர் சீனிவாசனின் இந்தப் பேச்சு கட்சிகார்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.