Skip to main content

வேலூர் தேர்தல் புறக்கணிப்பு ஏன்? டிடிவி தினகரன் விளக்கம்

 

ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வருகிற 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்தார்.
 

இந்நிலையில் டி.டி.வி. தினகரன் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
 

பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. சந்தித்த பின்னடைவுக்கான காரணங்களை உணர்ந்து எதிர்காலத்தில் அவற்றையும் எதிர்கொண்டு வெற்றிகளை குவிக்கும் தாகத்தோடு காத்திருக்கும் உங்களின் எழுச்சிக்கு முதலில் தலை வணங்குகிறேன்.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாம் பெற்ற வெற்றியால் எரிச்சலுற்ற நம் எதிரிகள் நம்மை வீழ்த்துவதற்கான சதி வேலைகளை இருமடங்காகச் செய்ய ஆரம்பித்த நேரத்தில்தான் பாராளுமன்றத் தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் வந்தது. நீதிமன்ற அனுமதியோடு தனி இயக்கம் கண்டு நாம் இயங்கி வந்தபோது நமக்கென ஒரு தனி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்ததை எதிர்த்து மிக நீண்ட சடடப்போராட்டத்தை நாம் நடத்தினோம்.


  ttv dhinakaran


வேட்பு மனு தாக்கலுக்கு சில மணி நேரம் முன்பு வரை நாம் யார்? அரசியல் கட்சியின் வேட்பாளரா? சுயேட்சை வேட்பாளரா? என்பதைக்கூட உறுதிபடச் சொல்ல முடியாத ஒரு சோதனையை வேறு எந்த இயக்கமும் சந்தித்திருக்காது.
 

கடைசியில் சுயேட்சைகளாக தான் போட்டியிட வேண்டும் என்று சொல்லப்பட்டு, அதன்பிறகு சில நாள் காத்திருப்புக்குப் பிறகு பரிசுப் பெட்டகம் சின்னத்தை பெற்றோம். அந்த சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததிலும், நாம் சுயேட்சைகள் என்பதால் மிகப் பெரும்பாலான தொகுதிகளில் நமது சின்னம் இரண்டாவது மற்றும் மூன்றாவது வாக்குப் பதிவு எந்திரங்களில் இடம் பெறுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
 

இத்தகைய தடைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் பணியை ஆரம்பித்தோம். பாராளுமன்ற பொதுத்தேர்தலில் ஒரு பின்னடைவை சந்தித்திருக்கும் இந்த நேரத்தில் ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்ந்து நம்மில் சிலரை அவர்கள் பக்கம் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

ஆனால் நமது இயக்கத்துக்கு நிஜமான மக்கள் ஆதரவு இருக்கிறது. நமது இயக்கத்தை தேர்தல்ஆணையத்தில் பதிவு செய்யும் பணி ஆகஸ்டு மாத இறுதி வாக்கில் நிறைவு பெறக்கூடும். அதுவரை நாம் சுயேட்சை என்ற அடையாளத்தோடு தான் தேர்தல் களத்தில் அறியப்படுவோம்.
 

அந்த அடிப்படையில் இந்த வேலூர் தொகுதி தேர்தலுக்காக ஒரு சின்னத்தை பெற்று, தொடர்ந்து வர உள்ள நாங்குநேரி, விக்கரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு தனித்தனி சின்னங்களை பெற்று நாம் தேர்தலை சந்திப்பதும், நமது இயக்கத்தை பதிவு செய்யும் பணி நிறைவடைந்து ஒரு நிரந்தர சின்னத்தை பெற்று அதன்பிறகு வரும் தேர்தல்களை சந்திப்பதும் என பல சின்னங்களில் போட்டியிடுவது மக்களிடம் மட்டு மல்ல - நமது தொண்டர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தும்.

 

இதை மனதில் கொண்டு நமது இயக்கத்தின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து வேலூர் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம்.


 

இந்த முடிவு பயத்தின் காரணமாக எடுக்கப்பட்டது. தேர்தல் களத்தைக் கண்டு அ.ம.மு.க. பயப்படுகிறது... என்றெல்லாம் நமது எதிரிகள் திட்டமிட்டு வி‌ஷமப் பிரச்சாரம் செய்யக்கூடும் அவற்றையெல்லாம் புறந்தள்ளுங்கள்.
 

நமது இயக்கத்துக்கான நிரந்தரமான புதிய அடையாளத்தோடு மக்களை சந்திப்போம். வெற்றிகளை ஈட்டுவோம். தமிழகத்தை இந்த துரோகக்கூட்டத்திடம் இருந்து மீட்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்