VCK plan to hold a protest against the governor

Advertisment

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்த ஆண்டிற்கான முதல் கூட்டத்தொடர்இன்று துவங்கியுள்ளது. ஆளுநர் ரவிக்கு சட்டமன்ற வளாகத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட ஆளுநர் சட்டப்பேரவை வளாகத்தில் அவர் உரையாற்றுவதற்கான மேடையில் ஏறி தமிழில் தனது உரையைத் தொடங்கினார்.

ஆளுநர் உரையாற்றும்போதுஅரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாகக் குற்றச்சாட்டுஎழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டுள்ளது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ட்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சட்டப்பேரவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும் அவை மரபுகளையும் அவமதித்ததோடு அரசியலமைப்புச் சட்டத்தையும் மீறி இருக்கின்றார். அவர் தனது உரையில் சிலவற்றைத் தவிர்த்தும் சிலவற்றை இணைத்தும் அவை மரபுகளுக்கு மாறாகப் பேசியிருக்கிறார். அம்பேத்கர், பெரியார் போன்ற மக்கள் தலைவர்களின் பெயர்களை உச்சரிக்காமலும் தமிழ்நாடு, திராவிடம் போன்ற பல சொற்களைத்தவிர்த்தும் தனது விருப்பப்படி சில கருத்துக்களை இணைத்தும் ஆளுநர் உரையைப் படித்திருக்கின்றார். இது அவை மரபுகளை மீறிய நடவடிக்கையாகும். அத்துடன், அரசியலமைப்புச் சட்டம் அவருக்கு அளித்துள்ள அதிகார வரம்புகளையும் மீறிய நடவடிக்கையாகும்.

Advertisment

இதன் மூலம் அவர் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்திருக்கிறார். எனவே, அவர் ஆளுநராகப் பதவியில் தொடரும் தகுதியை இழந்துவிட்டார். அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அவரை பதவியிலிருந்து வெளியேற்ற உரிய சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசையும் கேட்டுக் கொள்கிறோம். இவர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறார். இது அவரது தனிப்பட்ட நடவடிக்கை என்பதைவிட, ‘ஆர்எஸ்எஸ்ஸின் திட்டமிட்ட நடவடிக்கையே' என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டு மக்களை அவமதித்துவிட்டு தமிழ்நாட்டில் ஆளுநராக அவர் பதவியில் தொடர்வது ஏற்புடையதல்ல. அவர் ஆர்.எஸ்.எஸ் தொண்டராகச் செயல்பட விரும்பினால் ஆளுநர் பதவியிலிருந்து விலகிவிட்டு அதைச் செய்யவேண்டும்.

தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பெயர்களை உச்சரிக்காமல் தவிர்த்ததோடு சமூக நீதி, சமத்துவம், திராவிடம், தமிழ்நாடு முதலான சொற்களையும் அவர் உச்சரிக்க மறுத்திருக்கிறார். ஏற்கனவே தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்ட உரையில் இல்லாத சில வார்த்தைகளைச் சேர்த்துப் பேசி இருக்கிறார். தேசியகீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவர் அவையில் இருந்து வெளியேறியிருப்பது அதனையும் அவமதிப்பதாகவே உள்ளது.

ஆளுநரை நியமிக்கும் போது பிரதமர், குடியரசு தலைவர், மக்களவைத் தலைவர், மாநில முதலமைச்சர் கொண்ட குழு சேர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர் ஒரு மாநில அரசு நிறைவேற்றி தரும் சட்ட மசோதாக்களை குறிப்பிட்ட காலத்துக்கு மேல் கிடப்பில் வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் அரசியல் அமைப்புச் சட்ட உறுப்புகள் 155, 156, 200 மற்றும் 201 ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று சர்க்காரியா கமிஷனும், அதற்கு பின்பு அமைக்கப்பட்ட நீதிபதி வெங்கடாசலையா கமிஷனும் பரிந்துரைத்திருக்கின்றன. அவற்றை ஒன்றிய அரசு நிறைவேற்றுவதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவில், “ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவைமீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி.. சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.