Vanniyar sangam program canceled

Advertisment

திருவண்ணாமலை மாவட்டம், வன்னியர்குல ஷத்திரிய மடாலய சத்திரியர் சங்கத்துக்கு என திருவண்ணாமலை நகரில் இரண்டு திருமண மண்டபங்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன. இந்த மடாலயத்தின் தலைவராக திமுக மாவட்ட அவைத் தலைவர் முன்னாள் எம்.பி வேணுகோபால் உள்ளார்.

இந்த மடாலய சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் தொகுதிகளில் அரசு பள்ளியில் பயிலும் வன்னியர் சமூகத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஆகஸ்ட் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை ஆற்ற திமுக தெற்கு மா.செ, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வாழ்த்துரைதுணைசபாநாயகர் பிச்சாண்டி ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. சங்கத்தினர் இதற்கான அழைப்பிதழ் நோட்டீஸைமாவட்டம் முழுவதும் அனுப்பினர். இந்த நோட்டீஸ் பார்த்துவிட்டு சமூக ஊடகங்களில் கடந்த 3 நாட்களாக மடாலயத்தலைவர் வேணுகோபால் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

வன்னியர் சமுதாய நிகழ்ச்சிக்கு மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, பிச்சாண்டியை எப்படி அழைக்கலாம். திமுகவில் வன்னிய பிரமுகர்களே இல்லையா? அல்லது கட்சியை கடந்து வன்னிய பிரமுகர்கள் இல்லையா? பிற சமுதாய சங்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வன்னியர் தலைவர்களை, பிரமுகர்களை அழைத்துதான் நடத்துகிறார்களா என சமூக ஊடகங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

Advertisment

வன்னியர் மடாலய சங்க நிகழ்ச்சியில் அமைச்சர் வேலு கலந்துகொண்டால் அவருக்கு எதிராக வன்னியர் சங்கம், பாமக போன்றவை கறுப்புக்கொடி காட்டுவோம், நிகழ்ச்சி நடைபெறும் மடத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம் என மா.செக்கள் பக்தவச்சலம், நாராயணன் நம்மிடம் தெரிவித்தனர். நகரம் முழுவதும் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.

இந்நிலையில் வன்னியர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர்கள் இரண்டுபக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அதில், வன்னியர் சமுதாயத்துக்காக அமைச்சர் கல்வி வள்ளல் எ.வ. வேலு, எவ்வளவோ வேலைகளை செய்துள்ளார்கள். அவரை தூற்றுவது என்பது சரியானதல்ல. தலைவர் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கூட்டாக சென்றுதான் அவரை நிகழ்ச்சிக்கு அழைத்தோம். அவரும் வர இசைவு தெரிவித்திருந்தார். தற்போது இதனை அரசியலாக்கி அவதூறு கருத்துக்களை திட்டமிட்டு நம் மக்களிடையே வெளியிட்டு வருவது பெரும் வேதனைக்குரியது. சமுதாய ஒற்றுமையை சீர்குலைக்கவும், சமுதாய மக்களின் வளர்ச்சியைக் கெடுக்கவும் துணிந்த இந்த துரோகிகளின் செயல் வெட்கக்கேடானதாகும். மாநிலம் முழுவதும் பயணம் செய்யும் அமைச்சர், வரும் 27 ஆம் தேதி முதலமைச்சருடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதால் மடாலய நிகழ்ச்சிக்கு வரமுடியவில்லை என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

வன்னிய சகோதரர்களின் பலரின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக உறுதுணையாக வழிகாட்டியாக இருந்து சமுதாய வளர்ச்சிக்காக பல்வேறு உதவிகளை செய்துவரும் அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வன்னிய மக்களோடு இரண்டற கலந்துவிட்டவருக்கு சமுதாய மக்கள் என்றென்றும் துணை நிற்போம் என தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Advertisment

மடாலயம் சம்பந்தமாக சேலத்திலிருந்து பாமகவை சேர்ந்த ஒருவர் அமைச்சர் எ.வ. வேலுவை விமர்சித்து சமூக ஊடகத்தில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், பாமகவில் இருந்து திமுகவிற்கு வந்தவருமான எதிரொலிமணியன் பதிலடி பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் ஊக்கத்தொகைவழங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டாலும், மடாலய பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.