vanathi srinivasan shares memories about gnanadesigan

Advertisment

த.மா.கா. மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். வழக்கறிஞரான ஞானதேசிகன், மூப்பனாருடன் நெருக்கமாக இருந்ததால், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானபோது அவருடன் சேர்ந்தே ஞானதேசிகன் செயல்பட்டார்.

த.மா.கா.வில் முக்கிய பதவிகளை வகித்துவந்தார். பின்னாளில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா., காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தபோது, தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் பொறுப்பு வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி உடல்நலக்குறைவின் காரணமாக சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இந்நிலையில், மறைந்த ஞானதேசிகன் உடனான சில நினைவுகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன். அவரது பதிவு பின்வருமாறு...

vanathi srinivasan about gnanadesigan

Advertisment

"ஞானதேசிகன் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் சிறப்பாகச் செயலாற்றியவர். தமிழகத்தில் வளமாக, அழுத்தமாக ஒலித்துக் கொண்டிருந்த தேசியத்தினுடைய ஒரு குரல் இன்று ஓய்ந்திருக்கிறது என நான் கருதுகிறேன். வழக்கறிஞர் தொழிலில் அவரது ஜூனியராக கிட்டத்தட்ட 10 ஆண்டுகாலம் நான் பணியாற்றி இருக்கிறேன். என்னுடைய வழக்கறிஞர் தொழிலிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மிகப்பெரிய எனக்கு ஆதரவாக இருந்த ஒருவரை நான் இழந்திருப்பதாக உணர்கிறேன். எந்த நேரத்திலும் சமரசமில்லாத ஒரு தேசிய குரலுக்குச் சொந்தக்காரர் அவர். மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தும் கூட அவரது அலுவலகத்தில் ஜூனியர் வழக்கறிஞராக எனக்கு வாய்ப்பளித்தார். எனக்குத் தன்னம்பிக்கையைக் கொடுக்கக்கூடிய ஒரு சக்தியாக அவர் இருந்தார்.

தமிழகத்தின் ஒரு அப்பழுக்கற்ற தேசிய நீரோட்டத்திலிருந்த ஒரு ஆளுமை மறைந்திருப்பது என்பது எனக்கு வருத்தத்தைக் கொடுக்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். இது எனக்கு ஒரு தனிப்பட்ட இழப்பாக நான் கருதுகிறேன். என்னுடைய அப்பாவிடம் பேசி எனது திருமணத்தை நடத்தி வைப்பதில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆரம்ப காலகட்டத்தில் எனது வக்கீல் தொழிலில் சிறந்த பயிற்சியைக் கொடுத்ததோடு, இந்த தொழிலில் மக்களுக்கு உதவ எந்த அளவு தர்ம சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்பதையும் எனக்குப் புரிய வைத்தவர் அவர்.

WhatsApp Image 2021-01-16.jpg

Advertisment

திருமணமாகி நான் டெல்லியில் வழக்கறிஞர் பணியிலிருந்தபோது, நான் மீண்டும் தமிழகம் திரும்ப முக்கியமான காரணமாக அவர் இருந்தார். தமிழகத்திலேயே நல்ல வாய்ப்புகள் உண்டு நீங்கள் ஏன் இங்கு திரும்பி வரக்கூடாது எனவும், என் அலுவலகத்திலேயே நீங்கள் பணியாற்றலாம் எனக்கூறி அவர் விடுத்த அழைப்பின் காரணமாகவுமே திரும்பவும் நாங்கள் தமிழகம் வந்தோம். அனைவரிடமும் நட்பு பாராட்டக் கூடியவர். கட்சி பேதமின்றி ஒரு சிறந்த மூத்த வழக்கறிஞருக்கு உதாரணமாக இருந்தவர். எனக்கு முதல் சம்பளத்தைக் கொடுத்த மூத்த வழக்கறிஞர் அவர். நான் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபாட்டுடன் இருந்து அதில் முன்னேறி வருவதற்கு மிக முக்கிய காரணம் அவர்".