Skip to main content

“பா.ஜ.க போல் சமூகநீதியை செயலில் காட்டுங்கள்” - வானதி சீனிவாசன் விமர்சனம்

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Vanathi Srinivasan crictize dmk and says Show Social Justice in Action

பா.ஜ.க.வை பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்தவரும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வானதி சீனிவாசன் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. சத்தீஸ்கரில் பழங்குடியினத்தைச் சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்தியப் பிரதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மோகன் யாதவ் ஆகியோர் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த பிரேம்சந்த் பைரவா, மத்தியப் பிரதேசத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் தேவ்தா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர். ஒடுக்கப்பட்ட மக்கள் அவர்களுக்குத் தேவையானதை அவர்களே செய்துகொள்ள அரசியல் அதிகாரம் வழங்குவதுதான் உண்மையான சமூக நீதி. அதைத்தான் பாஜக செய்திருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 12 பட்டியலினத்தவர், 8 பழங்குடியினர், 27 பிற்படுத்தப்பட்டோர், 11 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 ஆண்டுக்கால சுதந்திர வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் மத்திய அமைச்சரவை இதுதான். இது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கருக்கு பிறகு, பட்டியலினத்தைச் சேர்ந்த அர்ஜுன்ராம் மேக்வாலை, மத்திய சட்ட அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி இதுதான் சமூகநீதி அரசு.

ஆனால், சமூகநீதி, சம நீதி, சமத்துவம், ஜனநாயகம், பெண்ணுரிமை பேசும் தி.மு.க அமைச்சரவையில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முக்கிய துறைகளும் இல்லை. 35 பேர் கொண்ட அமைச்சரவையில் இருவர் மட்டுமே பெண்கள். வாரிசு அரசியல், ஊழலில் திளைக்கும் திமுகவுக்கு இனி சமூகநீதி பற்றிப் பேச எந்த உரிமையும் இல்லை. அமைச்சராக உள்ள மகன் உதயநிதியை, துணை முதலமைச்சராக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.

பாஜகவைப் பின்பற்றி தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரையும், பெண் ஒருவரையும் துணை முதலமைச்சராக்க வேண்டும். அவர்களுக்கு உள்துறை, நிதி, பொதுப்பணி, வருவாய், தொழில், உயர் கல்வி, பள்ளிக் கல்வி, சுகாதாரம் போன்ற முக்கியத் துறைகளை ஒதுக்க வேண்டும். இனியாவது வாய்ச் சொல்லில் வீரம் காட்டாமல், சமூகநீதியை செயலில் காட்டுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்