/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1k5_5.jpg)
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அமமுக, அதிமுக இணைந்து செயல்படும் என்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அறிவித்துள்ளனர். இங்கு வந்தபோது அனைவரும் சிறப்பான வரவேற்பினை அளித்தனர். எம்ஜிஆர் சிலைக்கும் ஜெயலலிதா சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றியது என்பது நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது. இது சாதாரண செயல்தான். தீர்ப்புக்கு பின்னே முடிவு செய்ய வேண்டும். அணியாக நாங்கள் தான் பலமாக இருக்கிறோம். நான் 2001 ஆம் ஆண்டிலேயே அமைச்சர். அவர் 2011 ஆம் ஆண்டில் தான் அமைச்சர். என்னைவிட ஜூனியர் தான் அவர். 1984 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமி ஜனதா தளத்திற்கு வேலை பார்த்தவர். 1986 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றத்தலைவராக நின்றே தோற்றவர். ஆனால் அவர் என்னைப் பற்றி நான் மாவட்டத்திற்கும் தொகுதிக்கும் செய்யவில்லை என சொல்லியுள்ளார். தஞ்சை மாவட்டத்திற்காக ஜெயலலிதா நான் கேட்டதை எல்லாம் கொடுத்தார்.
தமிழ்நாட்டில் இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி தான் இருந்தது. மூன்றாவது கல்லூரி ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. விவசாயக் கல்லூரி ஒரத்தநாட்டில் அமைந்துள்ளது. ஐடிஐ ஒரத்தநாடு, பொறியியல் கல்லூரி செஞ்சிப்பட்டி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராவூரணி, திருவையாறுக்கு ஐடிஐ, மாநகராட்சி இவை அத்தனையும் 4 வருடத்தில் ஜெயலலிதா கொடுத்தார். ஆனால் இவர் எடப்பாடி தொகுதிக்கு ஒன்று கூட செய்யவில்லை. யாருக்கும் வேலை கூட வாங்கித் தரவில்லை.
காலச் சூழ்நிலை அவர் பேசுகிறார். திராவிட வரலாறு, அதிமுக வரலாறு என எதுவும் தெரியாது. ஒரே மேடையில் தமிழ்நாட்டு வரலாறு, அரசியல், இந்திய அரசியல், உலக அரசியலைப் பற்றி விவாதிக்க தயாரா? நாங்கள் தான் இப்போது அதிமுக. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு ஜூன் மாதம் வரும். அதன் பின்பு எப்படி என்பதை அந்த நிலைமைக்குஏற்றவாறு முடிவெடுப்போம்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)