Skip to main content

வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா? காங்கிரசா? கே.எஸ். அழகிரி கேள்வி

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

 

வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா? காங்கிரசா? என கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி. 
 

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் அரசமைப்பு சட்ட பிரிவு 370 ஐ ரத்து செய்யும்  மசோதா மாநிலங்களவையில் முன்னறிவிப்பின்றி உள்துறை அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டது. அதை காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. ஆனால், ஒரே உறுப்பினரை மட்டும் கொண்ட ம.தி.மு.க.வின் சார்பாக வைகோ பேசுவதற்கு தீவிர முயற்சியை மேற்கொண்டார். இதைப் பார்த்த அமித்ஷா, ‘வைகோவின் பேச்சை கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவரை அனுமதியுங்கள்” என்று பரிந்துரை செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தன்னை அண்ணாவின் வழியில் வந்ததாகக் கூறிக் கொள்கிற வைகோ, கூட்டாட்சி தத்துவத்திற்கு உலை வைக்க முயற்சிக்கும் பா.ஜ.க.வை கடுமையாக எதிர்ப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியை கடுமையாகக் குற்றம் சாட்டி பேசினார். இப்படி பேசுவதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது. 

 

vaiko


நீண்டநெடிய நாடாளுமன்ற அனுபவம் கொண்ட வைகோ, கருத்துக்களை வெளிப்படுத்துவதை விட, உரக்க குரல் எழுப்புவதன் மூலம் நிதானத்தையும், பக்குவத்தையும் இழந்திருப்பதை காண முடிகிறது. ஏதோ ஒரு வகையில் அவருக்கு ஆத்திரமும், காழ்ப்புணர்ச்சியும் இருப்பதை அவரது பேச்சு உணர்த்துகிறது. தெருமுனையில் மேடை போட்டு மைக்பிடித்து ஆவேசமாக கத்துவது போல, நாடாளுமன்றத்தில் கத்தி பேசுகிறார். எச்சரிக்கிறேன் என்பது போலவும், சாபம் தருவது போலவும் பேசுகிறார். அவர் பேசிய போது பிரதமர் மோடியே கை தட்டினாராம், ரசித்தாராம். வைகோ எதை எதிர்பார்த்தாரோ, அது நடந்திருக்கிறது. 


காஷ்மீர் பிரச்சினையில் வைகோ பேச எடுத்துக் கொண்ட நேரத்தின் பெரும் பகுதியில் அவர் காங்கிரசை தாக்குவதிலேயே கவனமாக இருந்தார். ‘என்னை பேச விடுங்கள். நான் காங்கிரசை தாக்கி பேச வேண்டுமென்று” அவர் அனுமதி கேட்ட விதமும், அதை அமித்ஷா ஆமோதித்து அனுமதி வழங்க பரிந்துரை செய்ததும் மாநிலங்களiவில் நடந்திருக்கிறது. மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான பிறகு நிறைய மாற்றங்களை காண முடிகிறது. சுப்பிரமணிய சுவாமியை சந்திக்கிறார், மோடியை சந்திக்கிறார், பா.ஜ.க.வின் தலைவர்களை சந்திக்கிறார். அவர் பா.ஜ.க.வின் ஆதரவாளர்  என்ற முத்திரையை தவிர்ப்பதற்காக டாக்டர் மன்மோகன்சிங்கையும் சந்திக்கிறார். இதன்மூலம் வைகோ அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஓர் பச்சோந்தி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 


வைகோவின் அரசியல் பாதையை கூர்ந்து கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதை புரிந்து கொள்வார்கள். 18 ஆண்டுகாலம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து அழகு பார்த்த தி.மு.க.வுக்கு பச்சை துரோகம் செய்தவர், கலைஞருக்காக உயிரை விடுவேன் என்று கர்ஜித்த வைகோ, பலமுறை அவரது முதுகில் குத்தியிருக்கிறார். ஆனால், எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு அவரை வேலூர் சிறையில் சென்று சந்தித்து தமது கூட்டணியில் இணைத்துக் கொண்ட கலைஞர் அவர்களின் பெருந்தன்மை எங்கே ? வைகோவின் சிறுமைத்தனம் எங்கே ? 



கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வை வீழ்த்துவதற்கு தி.மு.க. தலைமையில் வலிமையான கூட்டணி அமைத்த போது அதற்கு எதிராக சதி திட்டம் தீட்டியவர் வைகோ. இதற்காகவே மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியவர் வைகோ. இதற்கு காரணம் ‘தி.மு.க. ஆட்சிக்கு வரக்கூடாது. ஸ்டாலின் முதலமைச்சர் ஆகி விடக் கூடாது” என்கிற அரசியல் காழ்ப்புணர்ச்சி தான். 


காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் என்கிறார். இதைத் தான் பா.ஜ.க.வும் சொல்கிறது. தத்துவ இயலில் ஒரு வாதம் உண்டு. தீவிர இடதுசாரிகளும், வலது சாரிகளும் வெவ்வேறாக காட்சி அளிப்பார்கள். ஆனால் ஒரே விதமாக பேசுவார்கள். அதைத் தான் மோடியும், வைகோவும் செய்து கொண்டிருக்கிறார்கள். நேருவினுடைய மிக உறுதியான லட்சிய நோக்கினாலும், நடவடிக்கையினாலும் தான் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. இல்லையேல், ஜின்னாவின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தானோடு இணைந்திருக்கும். ஒருவாரகால நடவடிக்கையின் மூலம் உலகின் மிக அழகிய நிலப் பரப்பை இந்தியாவோடு சேர்த்த பெருமை நேரு பெருமகனாருக்கு உண்டு. இதை துரோகம் என்று வைகோ சொல்கிறாரா ? 

 

ksalagiri


காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் வைகோ, என்ன துரோகம் செய்தது என்று சொன்னால் பதில் கூற தயாராக இருக்கிறோம். பாம்பையும், கீரியையும் சண்டையிட வைப்பதாக சொல்லும் மோடி மஸ்தான், கடைசி வரை அந்த சண்டையை நடத்தவே மாட்டான். அதுபோல, துரோகம், துரோகம் என்று சொல்லும் வைகோ, எது துரோகம் என்று சொல்லாமல் தவிர்க்கக் கூடாது. தி.மு.க.விலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை உலகமே அறியும். அது அவருக்கு புரியவில்லை என்றால், அதை புரிய வைக்கிற ஆற்றல் தமிழக காங்கிரசுக்கு உண்டு.



அண்ணாவின் பெயரை மூச்சுக்கு முன்னூறு தடவை முழங்குகிற வைகோ, காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பா.ஜ.க.வின் சதி திட்டத்திற்கு துணை போகலாமா ? இதைவிட அண்ணாவின் கொள்கைக்கு வைகோ என்ன துரோகம் செய்துவிட முடியும்? தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்;சிகளின் கூட்டணியில் ம.தி.மு.க. இருக்கிறது. மாநிலங்களவையில் ஒரே உறுப்பினராக இருக்கிற ம.தி.மு.க.வின் பிரதிநிதி வைகோ காங்கிரசைப் பற்றி விமர்சிப்பதை எதிர்த்து நூறு உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் விமர்சனம் செய்து தோலுரித்துக் காட்டுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வைகோவுக்கு எதிரி பா.ஜ.க.வா ? காங்கிரசா ? காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரசையே விமர்சிக்கிற அரசியல் நாகரீகமற்ற வைகோவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய விமர்சனங்கள் தொடருமேயானால் கடுமையான ஏவுகணைகளை காங்கிரஸ் கட்சியிலிருந்து வைகோ மீது ஏவி விடப்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மசூதி நோக்கி வில் அம்பு; சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க வேட்பாளர்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Controversial BJP candidate and Bow arrow towards the mosque in telangana

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அந்த வகையில், மொத்தம் 17 மக்களவைத் தொகுதிகள் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாரத ராஷ்டிர சமிதி கட்சி, பா.ஜ.க ஆகிய கட்சிகள் களம் இறங்குகிறது. இங்கு பெரு நகரமாக பார்க்கப்படும் ஹைதராபாத் மக்களவைத் தொகுதி, கடந்த 1984ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஏஐஎம்ஐஎம் கட்சி வசம் உள்ளது. தனது தந்தைக்கு பிறகு, ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருக்கும் அசாதுதீன் ஒவைசி ஹைதராபாத் மக்களவை தொகுதியில் எம்.பியாக உள்ளார். இவரை எதிர்த்து பா.ஜ.க சார்பில், உள்ளூர் பிரபலமான மாதவி லதா என்ற பெண் மருத்துவர் ஹைதராபாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், நேற்று (17-04-24) நாடு முழுவதும் ராம நவமி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு அனைத்து மாநிலங்களில் உள்ள ராமர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளும், அதனையொட்டி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன. அந்த வகையில், தெலுங்கானா பா.ஜ.க எம்.எல்.ஏ ராஜா சிங் தலைமையில் ராம நவமி ஷோபா யாத்திரை, காவல்துறையின் தடையை மீறி நடத்தப்பட்டது. அந்த விழாவில் ஹைதராபாத் பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா பங்கேற்றார். அது தொடர்பாக ஊர்வலம் ஒன்றில் மாதவி லதா வலம் வந்த போது, அவரது செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோவில், மாதவி லதா தனது கைகளில் வில், அம்பு பிடித்திருப்பது போல் பாவனை செய்து தொலைவிலிருக்கும் இலக்கை நோக்கி எய்கிறார். அதனைப் பதிவு செய்யும் கேமரா, அம்பின் திசை மற்றும் இலக்காக அருகில் இருக்கும் மசூதி ஒன்றை சுட்டிக்காட்டுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து, பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதாவுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

இதனையடுத்து, இந்த வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த மாதவி லதா, இந்தச் சம்பவத்திற்கு மன்னிப்பு கூறியுள்ளார். இது குறித்து பா.ஜ.க வேட்பாளர் மாதவி லதா தனது ட்விட்டர் (எக்ஸ்) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது, “என்னுடைய வீடியோ ஒன்று ஊடகங்களில் பரவி எதிர்மறையை ஏற்படுத்துவது எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது முழுமையடையாத காணொளி என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மேலும் இதுபோன்ற காணொளியால் யாருடைய உணர்வும் புண்பட்டிருந்தால், எல்லா நபர்களையும் மதிப்பதால் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்