Advertisment

அமைச்சரை யாராவது பார்த்தீர்களா? அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது? கொடூரர்களின் கைகளில் ஆட்சி... செந்தில்பாலாஜி தாக்கு!

senthil balaji

Advertisment

மின் கட்டணமா? பகல் கொள்ளையா? - எங்கே போனார் மின்சாரத்துறை அமைச்சர்? என்கிற பெரிய கண்டன அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். தி.மு.கழக கரூர் மாவட்டப் பொறுப்பாளர் வி. செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ.

அந்த அறிக்கையில், ''நூறு நாட்களைத் தாண்டி விட்ட ஊரடங்கினால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. உள்ளூருக்குள் சிறு தொழில் நடத்தி நான்கைந்து பேர்களுக்கு வேலையும் கொடுத்து, தாமும் ஓரளவுக்குச் சம்பாதித்து கெளரவமாக வாழ்ந்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்பொழுது விடியும் என்று தெரியாமல் கதறுகிறார்கள்.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலாவது இருக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையின் வரி ஏற்றி, ஓடாத நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் வசூலித்து என இருப்பதையெல்லாம் வழிப்பறி செய்து திணற அடிக்கிறார்கள். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜூன் 5 ஆம் தேதியன்றே மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Advertisment

இந்த அரசாங்கத்துக்குத்தான் சொல் புத்தியும் கிடையாது சுயபுத்தியும் கிடையாதே! மு.க.ஸ்டாலின் இதுவரைக்கும் ஆலோசனைகளுக்கு மட்டுமே ஐம்பது அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறார். செவிடன் காதில் ஊதிய சங்காக கலெக்‌ஷன் - கமிஷன் - கரப்ஷன் என்று கணக்குப் போட்டு, அந்திமக் காலத்தில் வாரிச்சுருட்டுவதிலும், வெட்டி விளம்பரத்திலும் கவனமாக இருக்கும் முதலமைச்சர் ‘என்ன ஆலோசனை சொன்னார் மு.க.ஸ்டாலின்’ என்று இப்பொழுது கேட்கிறார்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இலட்சத்தைத் தாண்டிவிட்டது. தினசரி இறக்கிறவர்களின் சராசரி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. முதலமைச்சரின் பி.ஏவே கரோனாவால் இறந்து போனார். அமைச்சர், எம்.எல்.ஏக்கள் என புதிய தொற்றாளர்கள் குறித்த செய்தி வந்து கொண்டேயிருக்கிறது. எதைப்பற்றியாவது துளியாவது சிந்திக்கிறாரா முதலமைச்சர்? அவருக்கு என்ன சொகுசான வாழ்க்கை. சேலத்துக்கும்-சென்னைக்கும் வண்டி ஓட்ட ட்ரைவர், பாதுகாப்புக்கு போலீஸ், பெட்டியை நிரப்ப வசூல் என்று ‘விபரீத ராஜ வாழ்க்கை’ வாழும் முதலமைச்சரும் அவரது சகாக்களும் மக்களைப் பற்றி எதையாவது நினைக்கிறார்களா?

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும்.

tneb

மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? எப்பொழுதும் இல்லாத அளவில் ஒவ்வொரு வீட்டிலும் மின்கட்டணம் வந்திருக்கிறது. எங்கள் மாவட்டமான கரூர் செல்லாணடிபாளையத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பில்லாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெறும் ஐம்பது ரூபாய் கட்டிய விவசாயி அவர். நூறு யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு மின் கட்டணமே கட்டாத விவசாயிக்கு லட்சத்தில் பில். இது ஒரு சோற்றுப்பதம்தான். மின்கட்டணம் செலுத்துகிற அத்தனை பேருமே ‘எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு பில்’ என்று கூக்குரல் போடுவது காதில் விழவில்லையா?

ஐயா, மின் துறை அமைச்சரே, டாஸ்மாக் மட்டும்தான் உங்கள் துறையா? மின்சாரத்துறைக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையா? தொழிலே நடக்காத போது மின்கட்டணம் செலுத்தச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? வட்டிக்கு கடன் வாங்கி, அசலையும் கட்ட முடியாமல், வட்டிக்கும் வழியில்லாமல், சோற்றுக்கே பஞ்சம் வரும் நிலையில் இருப்பவர்களிடம் மின் கட்டணத்தைக் கட்டச் சொல்லிக் கேட்பதில் என்ன நியாயம்? உங்களுக்கெல்லாம் கருணை இல்லையா?

ஊர் ஊராக, தெருத்தெருவாக வாக்குக் கேட்டுச் சென்றவர்கள்தானே நாம்? இன்றைக்கு அந்த மக்கள் எல்லாம் அழுகுரல் எழுப்புவது காதில் விழவில்லையா? குமாரபாளையத்திலேயே விசாரியுங்கள். வெளியில் செல்ல பயமாக இருந்தால் ஃபோனில் கேட்டுப்பாருங்கள். தறிக்குடோன் தொடங்கி பட்டறை வரைக்கும் விசாரியுங்கள். மூன்று ஷிப்ட் ஓடிய நிறுவனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு ஷிப்டும் அரை ஷிப்டுமாக ஓடி, பாதித் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் எனச் சொல்லி, சந்தையிலும் விலை இல்லாமல்- எவ்வளவு துன்பங்கள் அவர்களுக்கு? ஏதாவது தெரியுமா உங்களுக்கு? நிவாரணம் என்று எதை வழங்கினீர்கள்?

அந்நிய தேசங்களில் தொழிலாளர்களின் சம்பளத்தையே அரசாங்கம் கொடுக்கிறது. அதையெல்லாம் செய்ய வேண்டாம். மின்கட்டணம் செலுத்த ஜூலை இறுதி வரை அவகாசம் கேட்டால், அத்தனை சதவீதம் பேர் கட்டிவிட்டார்கள், இத்தனை சதவீதம் பேர் கட்டவில்லை என்று நீதிமன்றத்தில் புள்ளி விவரக் கணக்குச் சொல்கிறார் அரசு வழக்கறிஞர். நியாயமாகப் பார்த்தால் அரசாங்கம் மின்கட்டணத்தை முழுமையாகத் தள்ளுபடி செய்து மக்களையும், தொழில் முனைவோரையும் காத்திருக்க வேண்டும். அதைச் செய்யவில்லை. ‘இத்தனை பேர் கட்டிவிட்டார்கள்’ என்று சொல்கிற அரசாங்கத்திடம் கட்டியவர்களில் எத்தனை பேர்கள் சிரமப்பட்டுக் கட்டினார்கள் என்ற தகவல் உண்டா? எத்தனை பேர் கடன் வாங்கிக் கட்டினார்கள் என்று தெரியுமா? ‘நீ எப்படிக் கட்டினால் என்ன? எனக்கு பணம் வந்துடுச்சு’ என்று பேசும் அரசாங்கம் வட்டி வசூல் நிறுவனமா நடத்துகிறது? அவகாசம் கேட்பதும் கூட கட்ட முடியாதவர்களை மனதில் வைத்துத்தானே? அவர்களுக்கு சலுகை எதுவும் கொடுக்க முடியாது என்று பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

http://onelink.to/nknapp

இதயத்தில் துளி ஈரமும் இல்லாத, சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மோசமான கொடூரர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது. அழுகிறவர்களுக்கும், வேதனைகளைப் பகிர்கிறவர்களுக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறேன். இன்னமும் பத்து மாதங்களில் தேர்தல் வரும். மக்களின் கவலையை யோசிக்காதவர்கள் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள். அப்பொழுது அரிதாரம் பூசிக் கொண்டு சுற்றுகிறவர்களை சீந்த நாதி இருக்காது. திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் ஆட்சி மலரும். தமிழகம் துன்பங்களிலிருந்து விடுதலையாகி தலை நிமிரும். காத்திரு தமிழகமே!'' என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

tneb MLA charges Electricity EB bill senthil balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe