Skip to main content

31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு ஆணை பிறப்பிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Published on 23/03/2020 | Edited on 23/03/2020

 

தமிழகம் மட்டும் ஏதோ பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதைப் போன்று நினைத்துக் கொண்டு  அரைகுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது எந்த வகையிலும் பயனளிக்காது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு முழு ஊரடங்கு மட்டும் தான் ஒரே வழி என்பதால் உடனடியாக தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் நோய் தாக்குதல் தொடர்பாக உலக அளவிலிருந்தும், உள்நாட்டிலிருந்தும் கிடைக்கும் தகவல்கள் அச்சத்தையும், பதைபதைப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. தமிழகத்தில் நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் சூழலுக்கு ஏற்ற வேகம் இல்லாதது கவலையளிக்கிறது.
 

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருவது அனைவரின் கண்முன் தெரிகிறது. நேற்றிரவு நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 397ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 65 அதிகரித்திருக்கிறது. நேற்று மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு மூவர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் மேலும் மூவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த இரு நாட்களில் மொத்தம் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது  ஒரு மருத்துவனாக என்னைக் கவலையும், பதற்றமும் அடையச் செய்திருக்கிறது.

 

anbumani ramadoss


 

இந்தியாவில் கரோனா பாதிப்பு நிலைமை குறித்து உலக வல்லுனர்கள் தெரிவித்துள்ள கருத்துகள்  இன்னும் அதிர்ச்சியும், பீதியும் அளிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சியாளரும், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நோய்த்தன்மைகள், பொருளாதாரம் மற்றும் கொள்கை ஆராய்ச்சி மைய இயக்குனரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான ரமணன் லட்சுமிநாராயணன், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் மூன்றாவது நிலையான சமூகப் பரவலை எட்டி விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். இன்றைய நிலையில் இந்தியாவில் குறைந்தபட்சம் 1500 பேருக்காவது கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டு  இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம்; இந்தியாவில்  அதிகபட்சமாக 60 விழுக்காட்டினர், அதாவது 78 கோடி பேர் கொரோனா வைரஸ் நோயால் தாக்கப்படக் கூடும் என்று அவர் மதிப்பீடு செய்திருக்கிறார்.
 

இந்தியாவில் கரோனா பரவல் குறித்த இந்த மதிப்பீடுகள் அதிர்ச்சியையும், கவலையையும் தரலாம். இவற்றை நம்ப முடியாமலும் போகலாம். ஆனால், இவை அனைத்தும் உண்மை. இப்படி ஒரு நிலைமை ஏற்பட வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நாடு தழுவிய அளவில் மூன்று வார ஊரடங்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். கிட்டத்தட்ட நான் கூறிய எச்சரிக்கைகளைத் தான் ரமணன் லட்சுமிநாராயணன் உறுதி செய்திருக்கிறார். சுகாதாரத்துறையை சேர்ந்த எனது நண்பர்கள் தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய் பரவல் தொடர்பாக தெரிவித்த தகவல்களைக் கேட்கும் போது பயமாக உள்ளது. தமிழக அரசு வெளியிடும் புள்ளிவிவரங்களை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் எவ்வளவு வேகம் தேவை என்பதை தமிழக அரசு இன்று வரை புரிந்து கொள்ளவில்லை.
 

அண்டை மாநிலமான ஆந்திராவில் கரோனா பாதிப்பு நம்மை விட மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனாலும், அங்கு 31-ஆம் தேதி வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு, ஏழைக்குடும்பங்களுக்கு  இலவச உணவுப் பொருட்களுடன் ரூ.1,000 நிதி உதவியும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவிலும் மார்ச் 31 வரை ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 87 லட்சம்  குடும்பங்களுக்கு தலா 12 கிலோ இலவச அரிசி, ரூ.1500 நிதியுதவியும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மராட்டியம், பஞ்சாப், கர்நாடகம் ஆகிய மாவட்டங்களிலும் பகுதி ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. ஆனால், மக்கள் மீது அம்மாநிலங்களுக்கு உள்ள அக்கறை தமிழக அரசுக்கு இல்லை.
 

அதுமட்டுமின்றி, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திட்டமிட்டபடி அத்தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருக்கிறது. இதன்மூலம் பள்ளிக்கல்வித்துறை எதை சாதிக்கப்போகிறது என்பது தான் தெரியவில்லை. 11 மற்றும் 12-ஆம்  வகுப்பு பொதுத்தேர்வுகளை மொத்தம் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். அவர்களுக்குத் துணையாக வரும் பெற்றோர், தேர்வுப்பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர் என இந்தத் தேர்வுகள் நடைபெறும் மையங்களில் மட்டும் சுமார் 50 லட்சம் பேர் கூடுவார்கள். இது கொரோனா பரவுவதற்கே வழி வகுக்கும். அதுமட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் வேளையில், கூட்டமாகத் தேர்வு எழுதுவது மாணவர்களுக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும். இது தேர்வுகளில் அவர்களின் செயல்பாட்டை பாதித்து, எதிர்கால வாய்ப்புகளை சீரழிக்கும் ஆபத்தும் உள்ளது.
 

தமிழக  சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்துவதால் நோய்த் தொற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து மருத்துவர் அய்யா அவர்கள் புள்ளி விவரங்களுடன் விரிவான அறிக்கை வெளியிட்டார். அதன்பிறகு  அவை கூட்டத் தொடரை ஒத்திவைக்காமல் தொடர்ந்து நடத்துவது நோய் பரவலை அதிகரிக்கச் செய்யும். பேரவைக் கூட்டத்தை எப்போது வேண்டுமானாலும் நடத்தலாம்; நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இப்போது எடுக்காவிட்டால், அதன்பின்னர் என்ன செய்தாலும் பேரழிவை தடுக்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும். கரோனாவை தடுக்க இன்றைய தேவை ஊரடங்கு தான்.
 

ஒட்டுமொத்த இந்தியாவிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் கூட புறநகர் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் போக்குவரத்து சேவைகள் வழக்கம் போல நடைபெறும் என்று அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் அறிவித்துள்ளன. வேகமாக நோய் பரவும் இந்த வேளையில் பேருந்துகளை இயக்குவது பயணிகளை அழைத்துச் செல்வதை விட, கொரோனா வைரசை பல ஊர்களுக்கும் கொண்டு சென்று பரப்புவதற்குத் தான் வழிவகுக்கும். அதேபோல், தமிழகத்தில் அனைத்துக் கடைகளும் திறந்திருக்கின்றன; மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது; வங்கிகள் உள்ளிட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இயக்குகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள போதிலும் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் தேவையின்றி பள்ளிகளுக்கு வரும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இவை அனைத்துமே கரோனா பரவுவதற்கு தான் வழிவகுக்கும்.

 

கரோனா வைரஸ் நோயை தடுப்பதற்கு முழுமையான ஊரடங்கு தான் சிறந்த வழி என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதலை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இன்று அறிவுறுத்தியுள்ளது. மக்கள் ஊரடங்கு நேற்று அறிவிக்கப்பட்டாலும், அதை மக்கள் முழுமையாகப் பின்பற்றவில்லை என்றும், சமூக இடைவெளியை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் இன்று வலியுறுத்தியுள்ளார்.
 

இந்தியாவில் கிட்டத்தட்ட 15 மாநிலங்களில் முழுமையாகவோ, பகுதியாகவோ ஊரடங்கு நடைமுறையில்  உள்ளது. ஆனால், தமிழகம் மட்டும் ஏதோ பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதைப் போன்று நினைத்துக் கொண்டு  அரைகுறை நடவடிக்கைகளை மேற்கொள்வது எந்த வகையிலும் பயனளிக்காது. கரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு முழு ஊரடங்கு மட்டும் தான் ஒரே வழி என்பதால் உடனடியாக தமிழகத்தில் வரும் 31-ஆம் தேதி வரை முழுமையான ஊரடங்கு ஆணை பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
 

கரோனா வைரஸ் அச்சத்தாலும், முழுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்படவிருப்பதாலும் அமைப்பு சார்ந்த பணியாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. ஆகவே, பிற மாநிலங்கள் அறிவித்திருப்பதைப் போன்று தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச உணவுப் பொருட்கள் மற்றும் நிதி உதவியை அரசு வழங்க வேண்டும். அத்துடன் அனைத்து வகையான கடன் தவணைகளையும் அடுத்த 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும்; அதற்கான வட்டியை ரத்து செய்யும்படி வங்கிகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.