Skip to main content

முதல்வரின் கடிதத்துக்கு மத்திய அமைச்சர் பதில்

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Union Minister's reply to Chief Minister's letter

 

சென்னையிலிருந்து மலேசியாவில் உள்ள பினாங்கு தீவிற்கு விமானப் போக்குவரத்து அறிமுகப்படுத்த முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்திய சிந்தியாவிற்கும் கடிதம் எழுதி இருந்தார். 

 

கடந்த மாதம் 11 ஆம் தேதி எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில் மலேசியாவில் உள்ள பினாங்கு தீவில் வாழும் தமிழர்கள் குறித்தும் மலேசியா மற்றும் பினாங்கு தீவின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு குறித்தும் குறிப்பிட்டு இருந்தார். மேலும் பினாங்கிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சார பிணைப்பு, வர்த்தக உறவு, சுற்றுலா வாய்ப்புகள் போன்றவற்றை குறித்து கூறி இருந்தார். தமிழ்நாட்டிற்கும் மலேசியாவிற்கும் இடையே இருக்கும் வணிக உறவுகளை மேம்படுத்தவும் சென்னைக்கும் பினாங்கிற்கும் இடையே நேரடி விமானங்களை முன்னுரிமை அடிப்படையில் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அக்கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டு இருந்தார்.

 

இந்நிலையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்தியா சிந்தியா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் சென்னைக்கும் பினாங்கு தீவிற்கும் இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க சாத்தியக் கூறுகளை ஆராய்ந்திட இந்திய விமான நிறுவனங்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் இந்திய விமான நிறுவனங்களின் ஆதரவுடன் பன்னாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிப்பதில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதிப் பூண்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.