
அமலாக்கத்துறையின் சோதனை தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இத்தகைய சூழலில் தான் இந்த வழக்கு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று (22.05.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, “தனி நபர்கள் செய்த விதிமுறை மீறலுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?. அமலாக்கத்துறை வரம்பு மீறி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் நீங்கள் (அமலாக்கத்துறை) எப்படி விசாரிக்க முயற்சிப்பீர்கள்?’ எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “இந்தியா அடிப்படையில் ஒரு கூட்டாட்சி நாடு ஆகும். அந்த அமைப்பிற்கு எதிராக அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது. வரம்புகள் அனைத்தையுமே மீறி அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது” எனக் குறிப்பிட்டார்.அதோடு அமலாக்கத்துறைக்குக் கடுமையான கண்டனத்தையும் அவர் தெரிவித்தார். இறுதியாக நீதிபதிகள், “டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறையின் சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இந்நிலையில் மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், டாஸ்மார்க் வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. இது அமலாக்கத்துறைக்கும், மத்திய அரசுக்கும் ஒரு பின்னடைவு என்று பார்க்கிறீர்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அவர், “இந்த கேள்வியே தவறு. அமலாக்கத்துறைக்கும், மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. அமலாக்கத்துக்கறை என்பது ஒரு சட்டப்படியான ஒரு அமைப்பு. உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் சட்டப்படி இந்த வழக்கை எதிர்கொள்வார்கள். அமலாக்கத்துறை ஒரு தன்னாட்சியான சுதந்திரமான அமைப்பு. அமலாக்கத்துறையின் வாதத்தை நீதிமன்றத்தில் வைப்பார்கள். அவர்களுடைய தரப்பு நியாயம் என்ன?. அவர்களுடைய தரப்பின் பதில்கள் என்ன? என்பதை நீதிமன்றத்தில் வைப்பார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் பொழுது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் முழுமையான வாதங்கள் இருக்கிறது. இன்னும் முழுமையான 2 தரப்பு வாதங்களை முடிவு செய்த பிறகுதான் ஒரு முடிவுக்கு வர முடியும். பல வழக்குகளில் இடைக்காலத் தடை இருக்கும் போது சில கேள்விகள் கேட்பார்கள்.
அதற்குப் பிறகு அந்த வழக்கில் முழுமையாக 2 தரப்பும் ஆஜராகி அவர்கள் தரப்பு வாதத்தை முன் வைக்கும் அந்த வழக்கினுடைய மாற்றமே நிறைய வழக்குகளில் மாறி இருக்கிறது நமக்கு எல்லாம் தெரியும். அதனால் அமலாக்கத்துறை அவர்களுடைய தரப்பு நியாயத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்பார்கள். அவர்கள் என்ன ஊழல் நடந்துள்ளதோ அதை மக்களுக்கு எடுத்துக் கூறுவார்கள். தண்ணி குடிச்சவன் தண்டனை அனுபவிச்சு தான்..... சாரி (அதன் பிறகு திருத்திக் கொண்டு) உப்பு தின்னவன் தண்டனை அனுபவிச்சுதான் ஆகணும். அதனால் இங்க யார் யாரு தவறு செய்தார்களோ அவர்கள் எல்லாம் நிச்சயமாகத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.