Skip to main content

"மேல்முறையீடு செல்லாததற்கு காங்கிரசுக்குள் ஒரு சதி இருக்கலாம்" - மத்திய அமைச்சர்கள்

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

union minister anurag thakur and tharmendra pratan press meet

 

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடக மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள்’ என்ற வகையில் பேசியிருந்ததாகக் கூறி பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் முன்தினம் ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 

இதனைத் தொடர்ந்து நேற்று ராகுல் காந்தியின் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் ஜனநாயகத்தை மோடி அரசு கேள்விக்குறியாக்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா, ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் ராகுல் காந்திக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் அனுராக் தாகூர் மற்றும் தர்மேந்திரா பிரதான் ஆகிய இருவரும் ஒன்றாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், "காங்கிரஸ் கட்சியினர், அதிலும் குறிப்பாக நேரு - காந்தி குடும்பத்தினர் தங்களுக்கு தண்டனை விதிக்க முடியாத தனி இந்திய தண்டனை சட்டத்தை விரும்புகிறார்கள். அவர்களுக்கு என தனி நீதித்துறை வேண்டும் என நினைக்கிறார்கள். மேலும் அவர்கள் நிலப்பிரபுத்துவ மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சட்டம் அனைவருக்கும் சமம் என்பதை புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். ராகுல் காந்தி வழக்கமான குற்றவாளி. எந்த விளைவுகளையும் சிந்திக்காமல் எதையும் சொல்ல முடியும் என்று நினைக்கிறார்.

 

ராகுல் காந்தி தன்னை எப்போதும் நாடாளுமன்றம், அரசாங்கம் மற்றும் நாட்டிற்கும் மேலாக கருதுகிறார். ராகுல் தற்போது 7 வழக்குகளில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். நாடாளுமன்றத்தில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் பாஜகவுக்கோ மத்திய அரசுக்கோ எந்த பங்கும் இல்லை. மேலும், ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியினர் உயர்நீதிமன்றத்தை அணுகாததற்கு காங்கிரசுக்குள் ஒரு சதி இருக்கலாம் எனக் கருதுகிறோம். காங்கிரஸ் காட்சியிலேயே ராகுல் காந்தியை அகற்ற விரும்புபவர்கள் யார்?" எனப் பேசியுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.