
தமிழக அரசு விசைத்தறியாளர்களுக்கு இலவசமாக வழங்கி வந்த 750 யூனிட் மின்சாரத்தை 1000 யூனிட் வழங்குவதாக அறிவித்தது. இதனையொட்டி விசைத்தறியாளர்கள் சார்பாக கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர். இதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று (11/03/2023) கோவைக்கு சென்றுள்ளார்.
முதலமைச்சரின் கோவைப் பயணத்தில் மூன்று முக்கிய நிகழ்வுகள் நடந்தது. குறிப்பாக மாற்றுக் கட்சியினர் பத்தாயிரம் பேர் திமுகவில் இணைந்த நிகழ்வு நடந்தது. இரண்டாவதாக கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் நடத்திய நன்றி பாராட்டு விழாவில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில் நெசவாளர்கள் வைத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாகவும் நெசவாளர்கள் கேட்காத, மாநிலமெங்கும் பல ஜவுளிப் பூங்காக்களை அமைக்க வழி வகை செய்வதாகவும் உத்தரவாதம் அளித்தார்.

மூன்றாவதாக முதலமைச்சர் கலந்து கொண்ட முக்கிய நிகழ்வு, திமுகவின் கோவை மாநகர மாவட்டச் செயலாளர் முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்தியின் இல்லத்திற்கு சென்றது. மாநகர மாவட்டச் செயலாளரான கார்த்தி சென்ற மாதத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் இருந்தபோது திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருந்தது தெரிய வந்ததாகக் கூறினர். இதன் தொடர்ச்சியாக கோவை சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

சிகிச்சைக்குப் பிறகு அவர் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த மாவட்டச் செயலாளர் கார்த்திக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைப்பேசி மூலமாக ஐந்து முறை கார்த்திக்கின் உடல் நலம் விசாரித்தார். முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கார்த்திக்கை நலம் விசாரித்து வந்தார். இந்நிலையில் தான் இன்று கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர் கார்த்திக்கை நேரில் சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றார். அங்கு அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்த முதல்வர் மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை சரிவர எடுத்துக் கொள்ளுமாறும் தீவிர ஓய்வில் இருக்குமாறும் அறிவுறுத்தினார். தமிழ்நாட்டின் முதல்வர், கட்சியின் தலைவர் மாவட்டச் செயலாளரின் வீட்டுக்கு சென்று உடல் நலனை விசாரித்த இந்நிகழ்வு ஒட்டுமொத்தமாகவே திமுக நிர்வாகிகள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரே வந்து விசாரித்தது கட்சியினருக்கு நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.