குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிராக சென்னை சைதாப்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்காக சைதாப்பேட்டை பஜார் சாலையில் இருந்து ஏராளமான இளைஞரணியினர் கொடி ஏந்தி ஊர்வலமாக புறப்பட்டனர். உதயநிதி ஸ்டாலினும் இந்த பேரணியில் கலந்து கொண்டு நடந்து சென்றார். சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே பேரணி சென்றதும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மேடையில் ஏறி அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர்.

Advertisment

dmk

Advertisment

அதன்பிறகு மேடையை விட்டு இறங்கி உதயநிதி ஸ்டாலின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டார். மறியலில் ஈடுபட்டதும் அவரை போலீசார் கைது செய்தனர். அவருடன் சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான இளைஞர் அணியினரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், தி.மு.க. இளைஞரணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. கைதான உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், “குடியுரிமை சட்ட திருத்தம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர் அகதிகளுக்கும் எதிரானது. குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை தி.மு.க. இளைஞரணியின் போராட்டம் தொடரும்” என்றார்.

Advertisment

இந்த நிலையில் நேற்றைய போராட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இஸ்லாமியர், ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து இளைஞரணியின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சென்னை சைதாப்பேட்டை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நகலைக் கிழித்தெறிந்து கைதானேன். மேலும் மக்கள் போராட்டங்களைத் துப்பாக்கி குண்டுகளைக் கொண்டு ஒடுக்கும் அடிமை அரசிடம் இந்த கைது நடவடிக்கை என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் அடிமை ஆட்சியாளர்கள் மக்கள் மன்றத்தில் கைக்கட்டி பதில் சொல்லும் நாள் வரும் என்பதை மறந்துவிட வேண்டாம். அதோடு, சென்னைக்குப் புதிது போலவும், ஊர் சுற்றிக் காட்டுவதுபோலவும் பேருந்தில் வைத்து சைதாப்பேட்டையை இருமுறை வலம்வந்தனர். கூட்டம் கலையும் என்பது காவல்துறையின் நம்பிக்கை. கலைந்து செல்பவர்களா கலைஞரின் உடன்பிறப்புகள், கடைசிவரை தொண்டர்கள் கூட்டம் குறையவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.