Advertisment

“தமிழ்நாட்டில்  அரசியலும் – ஆன்மீகமும்  என்றைக்கும் கலக்காது” - உதயநிதி ஸ்டாலின் பதிலடி

Udhayanidhi response to Tamilisai regarding Hindi imposition

Advertisment

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்கான அழைப்பிதழ் வெளியான உடனே தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர்.

இந்த சூழலில் டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில் கலந்துகொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும், மக்களைக் கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறினார். மேலும் அவர், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்? தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர் எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார். இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் நல் திருநாடு என்ற வார்த்தை விடுபட்டதற்கு முதல்வர் ஸ்டாலின், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் எனப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். அதிலும் முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது சமூக வலைதளபக்கத்தில், “மத்திய அரசு நிறுவனமான தூர்தர்ஷனில் பல ஆண்டுகளாக துறை சார்ந்த விழா கொண்டாடுவதை வேண்டுமென்றே இந்தி திணிப்பு என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. நாடு முழுவதும் ஒரே மாதிரி மொழிவாரியாக தொலைக்காட்சி பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக டிடிதமிழ் என்று பெயர் மாற்றப்பட்டது. இங்கே தமிழ் எங்குமே விடுபடவில்லை.தங்கள் குடும்ப தொலைக்காட்சிக்குத் தமிழ் பெயர் வைக்காமல் ஆங்கில பெயரை வைத்துக்கொண்டு தமிழ் பெயர் பற்றி பேசுகிறார் முதல்வர் என்பது தான் வேடிக்கை.

Advertisment

நம் பிரதமர் திரு.நரேந்திர மோடி எந்த மொழிக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை நம் தமிழ் மொழிக்கு கொடுக்கிறார். ஆனால் மத்திய அரசு தமிழுக்கு எதிரானது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் முதல்வர். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை, மும்பை துறைமுகத்திற்கு தமிழ் பெயர் மற்றும் இராஜராஜ சோழரின் நினைவுச்சின்னம் என்று மாநிலம் கடந்தும் தமிழின் சிறப்பை எடுத்துச் சென்றிருக்கிறார் நம் பிரதமர்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு மட்டுமே அடையாளமான செங்கோலை எல்லா மாநிலத்தவரும் கூடும் பாராளுமன்றத்தில் நிறுவி அலங்கரிக்கச் செய்திருப்பது நம் தமிழ்நாட்டிற்கு பெருமை தானே அந்தப் பெருமையும் எதிர்த்தவர்கள் தான் திமுகவினர். சென்னை தொலைக்காட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் முறையை பார்த்தாலே பாடுபவர்கள் போதுமான பயிற்சியின்றி தவறாக பாடுகிறார்களே தவிர உள்நோக்கத்தோடு திராவிடத்தை தவற விட்டு பாடுவதாக தெரியவில்லை. ‘வராத மழையை விரட்டினோம்... புயலைத் தடுத்தோம்...’ என்று நாடகமாடுவதைப் போல, இல்லாத இந்தி திணிப்பை, திணிப்பு... திணிப்பு... என்று நாடகமாடினால் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளைச் சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது. அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் ‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – ‘சரி’ வலம். ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்.

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe