நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றது. அதேபோல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 13 இடங்களை கைப்பற்றியது. நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலில் திமுக வெற்றிக்கு முக்கியமான காரணமாக சொல்லப்பட்டது திமுகவின் பிரச்சார யுக்தி. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உதயநிதி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இவரது பிரச்சாரம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உதயநிதிக்கு திமுகவில் இளைஞரணி தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று திமுக தலைமை உதயநிதிக்கு திமுக இளைஞரணி மாநில செயலாளராக பதவியை அதிகாரபூர்வமாக அறிவித்தது.இந்நிலையில், சென்னை அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் ஆலோசனை கூட்டம் உதயநிதி தலைமையில் தொடங்கியது. இது உதயநிதியின் முதல் ஆலோசனை கூட்டம் ஆகும். இதில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பல மாவட்டத்தில் இருந்தும் வந்து பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கோட்டத்தில், இளைஞரணி செயல்பாடுகளை வேகப்படுத்துவது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, இளைஞரணி சார்பாக கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும் மாற்று கட்சியில் இருக்கும் அதிருப்தி இளைஞர்களை திமுகவில் சேர்ப்பது தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.