The twist in the case of Colonel Pandian who spoke threateningly!

Advertisment

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த இராணுவ வீரர் பிரபு மற்றும் கவுன்சிலரான சின்னசாமிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தத் தகராறு கைகலப்பாக மாறியது. இதில், இராணுவ வீரர் பிரபுவுக்கு கடுமையான காயம் ஏற்பட்டு பிறகு மரணமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்து தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்த போராட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். இதில், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கர்னல் பாண்டியன் என்பவரும் கலந்து கொண்டார்.

போராட்டத்திற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த கர்னல் பாண்டியன், “எங்களுக்கும் குண்டு போடவும் துப்பாக்கியால் சுடவும் தெரியும்” என்றார். இதற்கு அங்கிருந்த செய்தியாளர்கள், “நீங்கள் பேசுவதே பெரும் மிரட்டல் தொனியில் இருக்கிறதே” என்று தெரிவித்தனர். அதற்கு அவர், “திமுகவிடம் பணம் வாங்கிக்கொண்டு செய்திகளைப் போடுவதேயில்லையா”? என்று தெரிவித்தார். இதனால், செய்தியாளர்களுக்கும் கர்னல் பாண்டியனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கரு.நாகராஜன் சமாதானம் செய்து வைத்தார்.

Advertisment

அதன்பிறகு போராட்ட மேடைக்கு சென்ற கர்னல் பாண்டியன் மீண்டும் பேசும்போது, “ஒரு விஷயத்தை தமிழக அரசுக்கு எச்சரிக்கிறேன். உலகத்திலேயே இரண்டாவது பெரிய ஆர்மி இந்தியன் ஆர்மி. அதுமட்டுமல்ல, உலகத்திலேயே ஒழுக்கமான ஆர்மி. அப்படிப்பட்ட இராணுவ வீரர்களை சீண்டினால் அது தமிழகத்திற்கும் தமிழக அரசுக்கும் நல்லதல்ல. எங்களுக்கு பரீட்சை வைத்து பார்க்க நினைத்தால் நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பாக இருக்காது.

இதை நான் அன்பாக சொல்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் அனைத்து முன்னாள் இராணுவ வீரர்களும் குண்டு வைப்பதிலும் சுடுவதிலும் சண்டையிடுவதிலும் கெட்டிக்காரர்கள். இந்த வேலைகள் எல்லாம் எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இதை எல்லாம் நாங்கள் செய்வதாக இல்லை. எங்களை செய்ய வைத்து விடாதீர்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன்” எனக் கூறி இருந்தார்.

தொடர்ந்து பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் கர்னல் பாண்டியன் பாஜகவின் போராட்டக் களத்தில் மிரட்டும் வகையில் பேசியதாக அவர் மீது 2 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல்துறையின் உளவுத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவல்களை வைத்து திருவல்லிக்கேணி காவல்துறையினர் கர்னல் பாண்டியன் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது மற்றும் வன்முறையைத் தூண்டுவது என்பதன் அடிப்படையில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இது குறித்து விசாரணை நடத்தி குற்றத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பிரிவுகள் சேர்க்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Advertisment

இந்நிலையில், ராணுவ அதிகாரி பாண்டியன் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியுள்ளார். பாண்டியன் மன்னிப்பு கோரியதை அடுத்து அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையின் போது, இனி இதுபோல் பேச மாட்டீர்களா என பாண்டியனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இனி இவ்வாறு பேச மாட்டேன் என பாண்டியன் நிபந்தனை அற்ற மன்னிப்பு கோரியதை அடுத்து முன் ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது.