TVK leader Vijay welcomed supreme court verdict about waqf bill

மத்திய பா.ஜ.க கொண்டு வந்த வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ், திமுக, விசிக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தது. அந்த வகையில் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா அமர்வு முன்பு விசாரணைக்கு நேற்று (16-04-25) வந்தது. அப்போது, இந்து அறநிலையத்துறையில் இந்துக்கள் மட்டுமே நிர்வாகிகளாக நியமிக்கப்படும் பட்சத்தில், வக்ஃப் சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது?, இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை மற்றும் வாரியங்களில் நியமிப்பீர்களா? வக்ஃப் சொத்து எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?. என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி வக்ஃப் வாரிய சட்டம் குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisment

இதையடுத்து, வக்ஃப் சட்டத்திருத்தம் தொடர்பான மனு மீதான விசாரணை இரண்டாம் நாளான இன்று (17-04-25) உச்சநீதிமன்றத்தில் வந்தது. அப்போது , ‘வக்ஃப் வாரிய புதிய சட்டத்தில் எந்தவொரு உறுப்பினர் நியமனமும் இருக்கக் கூடாது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியம் என அறிவிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. புதிய சட்டப்படி நில வகைப்படுத்துதல் கூடாது. ஆவணங்கள் இல்லாத வக்ஃப் சொத்துக்கள் விவகாரங்களிலும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் கூடாது. நிலம் கையகப்படுத்துதல், உறுப்பினர் நியமனத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்’ எனக் கூறி வக்ஃப் புதிய சட்டத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தனர்.

 TVK leader Vijay welcomed supreme court verdict about waqf bill

வக்ஃப் வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வரவேற்றுள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “வக்ஃபு திருத்தச் சட்டப்படி எந்தப் புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளக் கூடாது என்றும், ஏற்கெனவே பதியப்பட்ட வக்ஃபு சொத்துகள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.

Advertisment

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் நான் எப்போதும் துணை நிற்பேன், தமிழக வெற்றிக் கழகம் துணை நிற்கும் எனத் தீர்க்கமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். பாசிச அணுகுமுறைக்கு எதிராக நாம் தொடங்கிய சட்டப் போராட்டத்தில் நமக்குத் துணையாக இருந்து இந்த உத்தரவைப் பெற்றுத் தந்த மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்விக்கும் அவருடைய வழக்கறிஞர் குழுவினருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.